மத்தியப் பிரதேச மாநிலம் ஹர்தா நகரில் உள்ள பட்டாசு ஆலையில், இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில், 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் ஹர்தா நகரில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஆலையில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளில் தீ பரவி, பயங்கர சத்தத்துடன் வெடிக்க தொடங்கியது.
இதுகுறித்து அப்பகுதியில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விபத்தில் அருகில் இருந்த வீடுகளும், இருசக்கர வாகனங்களும் எரிந்து நாசமாகின. இந்த கோர வெடி விபத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 59 பேர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த விபத்தில் ஆலைக்குள் மேலும் சிலர் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 இலட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று மத்தியப் பிரதேச முதலமைச்சர் அறிவித்துள்ளார். மேலும், அமைச்சர் உதய் பிரதாப் சிங், கூடுதல் தலைமைச் செயலாளர் அஜித் கேசரி, இயக்குநர் ஜெனரல் ஹோம் கார்டு அரவிந்த் குமார் ஆகியோரை சம்பவ இடத்திற்கு உடடினயாக செல்ல உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.