சிலி நாட்டின் முன்னாள் அதிபர் ஜெபாஸ்டியன் பினேரா ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.
தென் அமெரிக்க நாடான சிலியில் இரண்டு முறை அதிபராக பதவி வகித்தவர் ஜெபாஸ்டியன் பினேரா. இவர் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரையும், 2018-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரையும் ஆட்சியில் இருந்தார். இவருடைய ஆட்சிக் காலத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செய்தார். அந்நாட்டின் பணக்காரர்களில் இவரும் ஒருவர்.
இந்நிலையில், அந்நாட்டின் பிரபல சுற்றுலா தலமான லாகோ ரன்கோ பகுதியில் நேற்று ஹெலிகாப்டரில் ஜெபாஸ்டியன் பினேரா பயணம் செய்தார். மேலும், அவருடன் 3 பேர் பயணம் செய்தனர்.
அந்த ஹெலிகாப்டர் திடீரென விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தகவலறிந்ததும் மீட்புப் படையினர் விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இந்த கோர விபத்தில் சிலி நாட்டின் முன்னாள் அதிபர் ஜெபாஸ்டியன் பினேரா உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. மேலும், 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.