இந்தியாவில் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதி, 2014-15 ஆம் ஆண்டில் 13.7 சதவீதமாக இருந்த நிலையில், 2022-23 ஆம் ஆண்டில் 25.6 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய இணையமைச்சர் ஷோபா கரந்தலாஜே தெரிவித்துள்ளார்.
பிரதான் மந்திரி கிசான் சம்பதா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டம், நாடு முழுவதும் விவசாயம் முதல் சில்லறை வர்த்தகம் வரையிலான விநியோகத்தை மேம்படுத்தும் விதமான நவீன கட்டமைப்பை உருவாக்க உதவுகிறது.
இந்தத் திட்டம் நாட்டின் உணவு பதப்படுத்தும் துறையின் வளர்ச்சிக்கு ஊக்கமளிப்பது மட்டுமின்றி, வேளாண் விளைபொருட்கள் வீணாவதைக் குறைக்கவும், பதப்படுத்தும் அளவை அதிகரிக்கவும், பதப்படுத்தப்பட்ட உணவுகளின் ஏற்றுமதியை அதிகரிக்கவும் உதவுகிறது.
2 லட்சம் குறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை நிறுவுதல் மற்றும் அவற்றை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்ப, நிதி மற்றும் வணிக ஆதரவை வழங்குவதற்காக, மத்திய அரசின் நிதியுதவித் திட்டமான குறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்துதல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
உணவுப் பதப்படுத்துதல் தொழில் துறையை மேம்படுத்த, 2021-22 முதல் 2026-27 வரையிலான காலகட்டத்தில் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.
இவை தவிர, வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம், போன்ற தொடர்புடைய அமைச்சகங்கள் மற்றும் துறைகள் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கப்படுகின்றன.
இத்தகவலை மத்திய உணவு பதப்படுத்தும் தொழில் துறை இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே தெரிவித்துள்ளார்.