பெண் கல்விக்காக கல்வி நிறுவனங்களுடன் இணைந்து சமூகப் பொறுப்புணர்வு நிதியிலிருந்து தாராளமாகப் பங்களிக்குமாறு தொழில்துறை தலைவர்களுக்குக் குடியரசுத் துணைத் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புது டெல்லியில் உள்ள இந்திரப் பிரஸ்தா மகளிர் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் பங்கேற்றார்.
மாணவர்களிடையே உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர்,
பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு நிதியைக் கல்வி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும் என்று தொழில் துறையினரைக் கேட்டுக் கொண்டார்.
மாணவர்கள்தான் ஜனநாயகத்தின் மகத்தான பங்குதாரர்கள் என்று குறிப்பிட்டவர் மாணவிகள் ஆர்வமுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவர்கள் தங்களின் திறமையை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும், தங்களது முழுத் திறனை உணரவும் ஒரு சூழல் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளது என்பதை அவர் எடுத்துரைத்தார். “நீங்கள் பெரிதாக சிந்திக்க வேண்டிய நேரம் இது, நீங்கள் சிந்திக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து சிந்திக்க வேண்டிய நேரம் இது” என்று அவர் மேலும் கூறினார்.
சிறப்பான நிர்வாகத்தின் விளைவாக, பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்பது வளர்ச்சியடைந்த பாரதம் 2047 Bharat@2047 என்ற நோக்கத்தை அடைய நமது பெண்கள் முதன்மைப் பங்கேற்பாளர்களாக இருக்க உதவியுள்ளது என்று கூறினார்.
“பாரதத்தை வளர்ந்த நாடாக மாற்ற எங்கள் பயணத்தை நீங்கள் திறம்பட வழிநடத்துவீர்கள். உலக நாடுகள் மத்தியில் அதை உயரத்திற்கு கொண்டு செல்வீர்கள்” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கல்வி மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் மாற்றத்திற்கான கருவி என்று வர்ணித்தவர், சமூகத்தில் சமத்துவத்தைக் கொண்டு வரும் மாற்றமே கல்வி என்று கூறினார். பெண் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், “பெண் கல்வி ஒரு புரட்சி, பெண் கல்வி ஒரு சகாப்தத்தை மாற்றி வருகிறது” என்று அவர் குறிப்பிட்டார்.
மாணவர்கள் ஒருபோதும் தோல்வி பயம் கொள்ளக்கூடாது என்றும் வலியுறுத்தினார். “தோல்வி பயம் வளர்ச்சியை அழிக்கும், தோல்வி பயம் புதுமைக் கண்டுபிடிப்பு முயற்சிகளை அழிக்கும்” என்று தெரிவத்தார். “ஒவ்வொரு தோல்வியையும் ஒரு படிக்கல்லாக மாற்றிக் கொள்ள வேண்டும்” என்றார்.