“வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களையாவது தக்கவைத்து கொள்ள நான் பிரார்த்தனை செய்கிறேன்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு நாடாளுமன்ற மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பதில் அளித்தார்.
மாநிலங்களவையில் பேசிய பிரதமர் மோடி,
“நீங்கள் 2024 மக்களவைத் தேர்தலில் 40 இடங்களை பெறுவதற்கு நான் இறைவனை வேண்டுகிறேன்” என கார்கேவை கேலி செய்தார். மேலும், காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் ‘400 இடங்கள்’ பேச்சு குறித்து அவரை கேலி செய்த பிரதமர் மோடி “நான் அவரின் பேச்சைக் கேட்டபோது இவ்வளவு சுதந்திரமாக பேச அவருக்கு எப்படி சுதந்திரம் கிடைத்தது என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பிறகுதான் கவனித்தேன், இரண்டு தளபதிகள் அவையில் இல்லை. இப்படி ஒரு வாய்ப்பு எப்போது வரும் என்று எதிர்பார்த்திருந்த கார்கேஜி, அது கிடைத்ததும் பவுண்ரிகளை அடித்து விட்டார்” என்றார்
“காங்கிரஸ் கட்சி அதன் ஆட்சியின்போது தேசியமயமாக்கல், தனியார்மயமாக்கல் குறித்து முடிவெடுக்கவில்லை. குடும்ப உறுப்பினர்களுக்கு பாரத ரத்னா வழங்கி, சாலைகளுக்கு குடும்ப உறுப்பினர்களின் பெயர்களையும் சூட்டியது. காங்கிரஸ் கட்சியின் சீரழிவுகள் என்னை வேதனைப்படுத்துகின்றன.
காங்கிரஸ் கட்சியை நிறுவியது யார் என்று நான் கேட்க மாட்டேன். ஆனால், ஆங்கிலேயர் ஆட்சியால் நீங்கள் பாதிக்கப்படவில்லையா? ஏன் நீங்கள் ராஜ பாதையை கடமை பாதை என பெயர் மாற்றவில்லை? நீங்கள் ஏன் போர் நினைவுச் சின்னங்களை உருவாக்கவில்லை? பிராந்திய மொழிகள் மீது ஏன் கவனம் செலுத்தவில்லை?” என்று கேள்வி எழுப்பினார்.
காங்கிரஸ் கட்சியின் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசியவர், “காங்கிரஸ் கட்சி எப்போதும் தலித், ஆதிவாசிகளுக்கு எதிரானது” என்றார். மேலும் அவர், “நான் மாநில முதல்வர்களுக்கு பண்டிதர் நேரு எழுதிய கடிதத்தின் மொழிபெயர்ப்பை படித்தேன். அவர் எந்தவிதமான இடஒதுக்கீட்டையும் ஆதரிக்கவில்லை. குறிப்பாக, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு. அந்த மக்கள் அரசு வேலைகளில் அமர்த்தப்படும்போது வேலையின் தரம் குறையும் என்று அவர் கருதினார். தற்போது காங்கிரஸார் அதற்காக குரல் கொடுக்கிறார்கள்” என்றார்.
மேலும் தனது பேச்சில் சாம் பிட்ரோடாவை குறிப்பிட்டு பேசியவர் “காங்கிரஸ் கட்சியின் வழிகாட்டிகளில் ஒருவர் அமெரிக்காவில் இருக்கிறார். அவர் கடந்த தேர்தலின் போது தனது ‘ஹுவா தோ ஹுவா’ கருத்துகளால் பிரபலமானார். சமீபத்தில், இந்திய அரசியலமைப்பு உருவாக்கத்தில் பாபா சாகேப் அம்பேத்கரின் பங்களிப்பை குறைத்து மதிப்பிட்ட அவர், நேரு மிக முக்கியப் பங்காற்றியதாக தெரிவித்திருக்கிறார்” என்றார்
“பட்டியலினத்தவர், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு இடஒதுக்கீட்டுக்கு எதிராகவே காங்கிரஸ் எப்போதும் செயல்பட்டிருக்கிறது. இடஒதுக்கீட்டை நேரு தீர்க்கமாக எதிர்த்தார்” எனத் தெரிவித்தார்.