“வளர்ச்சியடைந்த பாரதத்தின் அடித்தளங்களை வலுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மோடி 3.0 மேற்கொள்ளும்” எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் இன்று நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்தார்.
கூட்டத்தில்
அவையில் உரையாற்றிய பிரதமர், 75-வது குடியரசு தினம் நாட்டின் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என்றும், குடியரசுத் தலைவர் தமது உரையின் போது இந்தியாவின் தன்னம்பிக்கை குறித்துப் பேசினார் என்றும் கூறினார்.
இந்தியாவின் பிரகாசமான எதிர்காலம் குறித்து குடியரசுத் தலைவர் நம்பிக்கை தெரிவித்ததாகவும், இந்தியக் குடிமக்களின் திறனை ஒப்புக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார். வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற நாட்டிற்கு வழிகாட்டியாக அமைந்த குடியரசுத் தலைவரின் உத்வேகம் அளிக்கும் உரைக்கு அவர் நன்றி தெரிவித்தார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பயனுள்ள விவாதம் நடத்திய உறுப்பினர்களுக்குப் பிரதமர் திரு மோடி நன்றி தெரிவித்தார். குடியரசுத் தலைவரின் உரை, இந்தியாவின் வளர்ந்து வரும் நம்பிக்கை, நம்பிக்கைக்குரிய எதிர்காலம், நாட்டு மக்களின் அளப்பரிய ஆற்றலை விளக்கியது” என்று கூறினார்.
“எதிர்க்கட்சியினரால் எனது குரலை அடக்க முடியாது, ஏனென்றால் நாட்டு மக்கள் இந்தக் குரலுக்கு பலம் அளித்துள்ளனர்” என்றார். வீணாக்கப்படும் பொது நிதி, முதன்மையான ஐந்து நாடுகளில் ஒன்றாக இடம் பெறாதது, கொள்கை முடக்கம் ஆகியவற்றை நினைவு கூர்ந்த பிரதமர், முந்தைய குழப்ப நிலையிலிருந்து நாட்டை மாற்றியமைக்க தற்போதைய அரசு மிகுந்த கவனத்துடன் பணியாற்றியது என்று கூறினார். காங்கிரஸ் அரசின் 10 ஆண்டுகால ஆட்சியில், இந்தியாவுக்கு முதன்மையான ஐந்து நாடுகளில் ஒன்றாக இடம் பெறாதது, கொள்கை முடக்கம் போன்ற வார்த்தைகளை உலக நாடுகள் பயன்படுத்தியது என்று கூறிய அவர், எங்களுடைய 10 ஆண்டு கால ஆட்சியில் – முதல் 5 பொருளாதாரங்களில் ஒன்று என உலக நாடுகள் நம்மைப் பற்றி பேசுவதாகக் கூறினார்.
முந்தைய அரசுகளால் புறக்கணிக்கப்பட்ட காலனித்துவ மனப்பான்மையின் அறிகுறிகளை அகற்றுவதற்கான அரசின் முயற்சிகளையும் குறிப்பிட்டார். பாதுகாப்புப் படைகளுக்கான புதிய சின்னம், கடமைப் பாதை, அந்தமான் தீவுகளுக்குப் பெயர் மாற்றம், காலனித்துவ சட்டங்களை நீக்குதல், இந்திய மொழியை ஊக்குவித்தல் போன்ற பல நடவடிக்கைகளை அவர் பட்டியலிட்டார்.
உள்நாட்டு உற்பத்திப் பொருட்கள், பாரம்பரியம் மற்றும் உள்ளூர் மதிப்புகள் குறித்த கடந்த காலத் தாழ்வு மனப்பான்மையையும் குறிப்பிட்டார். இவை அனைத்திலும் தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
மகளிர் சக்தி, இளைஞர் சக்தி, ஏழைகள், விவசாயிகள் ஆகிய நான்கு மிக முக்கியமான பிரிவினர் குறித்து குடியரசுத் தலைவர் தமது உரையில் குறிப்பிட்டது பற்றி எடுத்துரைத்த பிரதமர், இந்தியாவின் இந்த நான்கு முக்கிய தூண்களின் வளர்ச்சியும், முன்னேற்றமும் நாடு வளர்ச்சியடைய வழிவகுக்கும் என்றார்.
2047-ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற நோக்கத்தை நாம் அடைய விரும்பினால், 20-ம் நூற்றாண்டின் அணுகுமுறை பலனளிக்காது என்று தெரிவித்தார்.
எஸ்சி, எஸ்டி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் உரிமைகள் மற்றும் வளர்ச்சி குறித்தும் பிரதமர் குறிப்பிட்டார். 370 வது பிரிவை ரத்து செய்தது, ஜம்மு-காஷ்மீர் மக்கள் நாட்டின் பிற பகுதிகளைப் போலவே உரிமைகள் பெறுவதை உறுதி செய்துள்ளது என்று தெரிவித்தார்.
இதேபோல், சிறப்புச் சட்டம் ரத்து செய்யப்பட்ட பின்னரே, வன உரிமைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டம், மாநிலத்தில் உள்ள வால்மீகி சமூகத்திற்கான குடியிருப்பு உரிமைகள் ஆகியவையும் அமல்படுத்தப்பட்டதாக அவர் கூறினார். உள்ளாட்சி அமைப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு இடஒதுக்கீட்டுக்கான மசோதா நிறைவேற்றப்பட்டதையும் குறிப்பிட்டார்.
பாபா சாஹேபை கௌரவிப்பதற்கான நடவடிக்கைகள் பற்றியும் குறிப்பிட்ட பிரதமர், பழங்குடியினப் பெண் நாட்டின் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற நிகழ்வையும் அவர் கூறினார்.
ஏழைகளின் நலனுக்கான அரசின் கொள்கைகள் குறித்து பேசிய பிரதமர் மோடி, எஸ்சி, எஸ்டி, இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் மற்றும் பழங்குடியின சமூகத்தினரின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை எடுத்துரைத்தார்.
இந்த சமூகத்தினருக்கு அதிகாரம் அளிப்பதற்காக, அனைத்து வசதிகளுடன் கூடிய வீடுகள், சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான தூய்மை இயக்கங்கள், இலவச சமையல் எரிவாயுத் திட்டம், இலவச ரேஷன், ஆயுஷ்மான் திட்டம் ஆகியவை பற்றி அவர் குறிப்பிட்டார்.
கடந்த 10 ஆண்டுகளில், எஸ்சி, பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை அதிகரிப்பு, பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு, இடைநிற்றல் விகிதம் கணிசமாகக் குறைந்தது, புதிய மத்திய பழங்குடியினர் பல்கலைக்கழகம் ஏற்படுத்தியதன் மூலம் அதன் எண்ணிக்கையை 1-லிருந்து 2 ஆக அதிகரித்தது, ஏகலைவா மாதிரிப் பள்ளிகளின் எண்ணிக்கையை 120-லிருந்து 400 ஆக அதிகரித்தது குறித்தும் அவர் பேசினார்.
உயர்கல்வியில் ஆதிதிராவிட மாணவர்களின் சேர்க்கை 44 சதவீதமும், பழங்குடியின மாணவர் சேர்க்கை 65 சதவீதமும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சேர்க்கை 45 சதவீதமும் அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
“அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் என்பது வெறும் முழக்கம் அல்ல, அது மோடியின் உத்தரவாதம்” என்று தெரிவித்தார். தவறான கூற்றின் அடிப்படையில் விரக்தியான மனநிலையைப் பரப்புவதற்கு எதிராக எச்சரித்தார்.
தாம் சுதந்திர இந்தியாவில் பிறந்ததாகவும், தனது எண்ணங்களும், கனவுகளும் சுதந்திரமாக இருப்பதாகவும், நாட்டில் காலனித்துவ மனப்பான்மைக்கு இடமளிக்கவில்லை என்றும் மேலும் கூறினார்.
பொதுத்துறை நிறுவனங்களின் முந்தைய குளறுபடிகளுக்கு மாறாக, இப்போது பி.எஸ்.என்.எல் போன்ற நிறுவனங்கள் 4 ஜி, 5 ஜி சேவையில் முன்னணியில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் சாதனை அளவில் உற்பத்தியை மேற்கொண்டு வருவதாகவும், ஆசியாவின் மிகப்பெரிய ஹெலிகாப்டர் தொழிற்சாலை கர்நாடகாவில் இருப்பதாகவும் அவர் கூறினார். ஆயுள் காப்பீட்டு நிறுவனமும் வரலாறு காணாத பங்கு விலையுடன் செழிப்புடன் வளர்ச்சியடைந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் 2014-ல் 234 ஆக இருந்த பொதுத்துறை நிறுவனங்களின் எண்ணிக்கை தற்போது 254-ஆக அதிகரித்துள்ளது என்றும், அவற்றில் பெரும்பாலானவை முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்து சாதனை அளவிலான வருவாயை அளித்து வருவதாக தெரிவித்தார்.
நாட்டின் பொதுத்துறை நிறுவனக் குறியீடு கடந்த ஆண்டில் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார். கடந்த 10 ஆண்டுகளில், பொதுத்துறை நிறுவனங்களின் நிகர லாபம் 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை ரூ.1.25 லட்சம் கோடியிலிருந்து ரூ.2.50 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார். மேலும் பொதுத்துறை நிறுவனங்களின் நிகர மதிப்பு ரூ.9.5 லட்சம் கோடியிலிருந்து ரூ.17 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார்.
ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த தாம் பிராந்திய விருப்பங்களை நன்கு புரிந்து வைத்திருப்பதாகப் கூறினார். ‘நாட்டின் வளர்ச்சிக்காக மாநிலங்களின் வளர்ச்சி’ என்ற மந்திரத்தை வலியுறுத்தினார்.
மாநிலங்களின் வளர்ச்சிக்கு மத்திய அரசு முழு ஆதரவு அளிக்கும் என்று அவர் உறுதியளித்தார். மாநிலங்களுக்கு இடையேயான வளர்ச்சியில் ஆரோக்கியமான போட்டி இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், போட்டித் தன்மையுடன் கூடிய கூட்டுறவு கூட்டாட்சி முறை தேவை என்று கூறினார்.
கொவிட் தொற்றுப் பாதிப்பின் சவால்களை எடுத்துரைத்த பிரதமர், இது தொடர்பாக அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் 20 கூட்டங்களை தாம் நடத்தியதை நினைவு கூரந்தார். சவாலைத் திறம்பட சமாளித்த அரசு இயந்திரத்தை அவர் பாராட்டினார்.
நாடு முழுவதும் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகள் மூலம் அனைத்து மாநிலங்களுக்கும் ஜி-20 தொடர்பான தகவல்கள் கொண்டுசெல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பல்வேறு மாநிலங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட நடைமுறையையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மாநிலங்களின் பங்களிப்பு குறித்து தொடர்ந்து பேசிய பிரதமர், முன்னேற விரும்பும் மாவட்டங்கள் திட்டத்தின் வெற்றிக்காக மாநிலங்களுக்குப் பாராட்டு தெரிவித்தார். திட்டத்தின் வடிவமைப்பு மாநிலங்களையும் நாட்டையும் கூட்டாக முன்னோக்கிக் கொண்டு செல்வதாகும் என்று கூறினார்.
நாட்டின் செயல்பாட்டை மனித உடலுடன் ஒப்பிட்டவர், செயல்படாத உடல் பாகம் ஒட்டுமொத்த உடலையும் பாதிக்கும் என்று கூறினார். அதேபோல் நாட்டில் ஒரு மாநிலம் பின்தங்கிய நிலையிலும், வளர்ச்சி குன்றிய நிலையிலும் இருந்தால், நாட்டை வளர்ச்சியடைந்ததாகக் கருத முடியாது என்று அவர் தெரிவித்தார்.
அனைவருக்கும் அடிப்படை வசதிகளை உறுதி செய்வதும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும் நாட்டின் கொள்கைகளில் உள்ளது என்று கூறினார். வரும் காலங்களில், வாழ்க்கையை எளிதாக்குவதைத் தாண்டி, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் நமது கவனம் இருக்கும் என்று அவர் கூறினார். வறுமையிலிருந்து மீண்டுள்ள புதிய நடுத்தர வர்க்கத்தினருக்கு புதிய வாய்ப்புகளை வழங்குவதற்கான தமது உறுதிப்பாட்டை அவர் வலியுறுத்தினார். சமூக நீதிக்கான மோடியின் கவசத்திற்கு அதிக பலம் வழங்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.
வறுமையில் இருந்து மீண்டு வந்தவர்களுக்கு அரசு அளித்து வரும் ஆதரவை எடுத்துரைத்த திரு நரேந்திர மோடி, இலவச ரேஷன் திட்டம், ஆயுஷ்மான் திட்டம், மருந்துகளுக்கு 80 சதவீத தள்ளுபடி, பிரதமரின் விவசாயிகள் கௌரவிப்பு நிதி, ஏழைகளுக்குப் பாதுகாப்பான வீடுகள், குழாய் மூலம் குடிநீர் இணைப்புகள், புதிய கழிப்பறைகள் கட்டுதல் ஆகிய பணிகள் தொடரும் என்ற அறிவிப்பை அவர் வெளியிட்டார். வளர்ச்சியடைந்த பாரதத்தின் அடித்தளத்தை வலுப்படுத்த எந்த வாய்ப்பும் தவறவிடப்பட மாட்டாது என்று கூறினார்.
அடுத்த 5 ஆண்டுகளில் மருத்துவ உள்கட்டமைப்பில் முன்னேற்றம் தொடரும் என்றும், மருத்துவ சிகிச்சை மிகவும் குறைந்த செலவினதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் மூலம் குடிநீர் கிடைக்கும் என்று கூறிய அவர், பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டு செறிவூட்டப்படும் என்றார். சூரிய சக்தி மின்சாரம் மூலம் நாடு முழுவதும் கோடிக்கணக்கான வீடுகளுக்கு மின்சாரக் கட்டணம் பூஜ்ஜியமாகிவிடும் என்று கூறினார்.
புத்தொழில் நிறுவனங்கள் அதிகரிக்கும் என்றும், காப்புரிமை தாக்கல் புதிய சாதனைகளை எட்டும் எனவும் அவர் தெரிவித்தார். அடுத்த 5 ஆண்டுகளில், ஒவ்வொரு சர்வதேச விளையாட்டுப் போட்டியிலும் இந்திய இளைஞர்களின் திறன்களை உலகம் காணும் என்று அவர் கூறினார். பொதுப் போக்குவரத்து முறை மாற்றியமைக்கப்படும் என்று தெரிவித்த அவர், தற்சார்பு இந்தியா இயக்கம் புதிய உயரங்களை எட்டும் என்றார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட குறைக்கடத்திகள் மற்றும் மின்னணுவியல் பாகங்கள் உலகில் ஆதிக்கம் செலுத்தும் என்று அவர் கூறினார். எரிசக்திக்காக மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்க மேலும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் உறுதியளித்தார்.
பசுமை ஹைட்ரஜன் மற்றும் எத்தனால் கலவையை நோக்கிய நடவடிக்கைகள் பற்றியும் அவர் குறிப்பிட்டார். சமையல் எண்ணெய் உற்பத்தியில் தற்சார்புடைய நாடாக மாறுவதற்கான இந்தியாவின் நம்பிக்கையையும் எடுத்துரைத்தார்.
அடுத்த 5 ஆண்டுகளுக்கான தொலைநோக்குப் பார்வை குறித்துப் பேசிய பிரதமர், இயற்கை விவசாயம் மற்றும் சிறுதானியங்களை பரப்புவது குறித்தும் பேசினார். விவசாயத்தில் ட்ரோன் பயன்பாடு அதிகரிக்கும் என்றும், நானோ யூரியா ஊக்குவிக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார். மீன்வளம் மற்றும் கால்நடை வளர்ப்பில் புதிய சாதனைகள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.
அடுத்த 5 ஆண்டுகளில் சுற்றுலாத் துறை மிகப்பெரிய வேலைவாய்ப்பு ஆதாரமாக மாறும் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். நாட்டின் பல மாநிலங்கள் சுற்றுலாவை மட்டுமே நம்பியிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். இந்தியா உலகின் மிகப்பெரிய சுற்றுலா மையயாக மாறவிருக்கிறது என்று அவர் கூறினார்
டிஜிட்டல் இந்தியா மற்றும் நிதித் தொழில்நுட்பத் துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை சுட்டிக்காட்டிய பிரதமர், அடுத்த 5 ஆண்டுகள் இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு சாதகமாக இருக்கும் என்றார்.
டிஜிட்டல் சேவைகள் இந்தியாவின் முன்னேற்றத்தை முன்னெடுத்துச் செல்லும் என்றும் அவர் தெரிவித்தார். விண்வெளி தொழில்நுட்பத் துறையில் நமது விஞ்ஞானிகள் நம்மை புதிய உயரத்திற்குக் கொண்டு செல்வார்கள் என்று தாம் முழுமையாக நம்புவதாகப் பிரதமர் கூறினார்.
பொருளாதாரத்தின் அடித்தளத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து பேசியவர், சுய உதவிக் குழுக்கள் பற்றியும் குறிப்பிட்டார். 3 கோடி லட்சாதிபதி பெண்களை உருவாக்கி அவர்களுக்கு அதிகாரமளிப்பதன் மூலம் அவர்கள் புதிய சரித்திரத்தை எழுதுவார்கள் என்று அவர் கூறினார்.
2047-ம் ஆண்டுக்குள் இந்தியா தனது பொற்காலத்தை அடையும் என்று கூறிய வளர்ச்சியடைந்த பாரதத்தின் மீதான அரசின் உறுதிப்பாட்டை எடுத்துரைத்தார்.
உண்மைகளை அவையிலும், நாட்டு மக்களிடமும் எடுத்துரைக்க வாய்ப்பளித்தமைக்காக மாநிலங்களவைத் தலைவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறியவர், உத்வேகம் அளிக்கும் உரையை வழங்கியதற்காகக் குடியரசுத் தலைவருக்கும் நன்றி தெரிவித்தார்.