மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் மற்றும் மெட்டா நிறுவனம் இணைந்து ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.
தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் மெட்டா நிறுவனம் இணைந்து மாணவர்களுக்கு தங்களின் தேர்வுகளுக்கு முன்னதாக ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க உதவும் பான்-இந்தியா என்ற புதிய திட்டத்தைத் அறிமுகப்படுத்துகிறது.
டெல்லியில் பிப்ரவரி 12 ஆம் தேதி இந்த திட்டத்தை மெட்டா மற்றும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் செயல்படுத்தவுள்ளது.
இந்த திட்டம் பாரத பிரதமர் மோடியின் பரிக்ஷா பே சார்ச்சா திட்டத்துடன் ஒத்துப்போகும் என்று தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங்க் கனூங்கோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ” தேர்வுகள் குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். மாணவர்கள் தேர்வுகளுக்கு தயாராகும் போது பெற்றோர்களும் அவர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துவார்கள்.
பாரத பிரதமர் மோடியின் பரிக்ஷா பே சார்ச்சா திட்டத்தின் ஆறாவது பதிப்பை தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கொண்டாடுகிறது.
இது மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் தேர்வு மன அழுத்தத்தைப் பற்றிய பார்வையை மாற்றுவதையும், தேர்வுகளின் போது அவர்களின் கவலையைப் போக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது ” என்று கூறினார்.
மேலும் அவர், ” மாணவர்களின் மழுத்தத்தை குறைக்கும் இந்த பான் – இந்தியா திட்டத்தில் மெட்டா போன்ற நிறுவனங்கள் தங்களின் ஆதரவை அளிப்பது பாராட்டத்தக்கது. ” எனக் கூறினார்.
தேர்வு நேரத்தில் மாணவர்களின் மன அழுத்தத்தை நாங்கள் உணர்ந்து, அவர்களின் நல்வாழ்வை ஆதரிப்பதில் உறுதியாக இருக்கிறோம் என்று மெட்டா நிறுவனத்தின் பொதுக் கொள்கையின் தலைவர் நடாஷா ஜோக் கூறியுள்ளார்.
மேலும் அவர், ” மாணவர்களிடையே தேர்வு அழுத்தத்தைக் கண்டறிய NCPCR உடன் கூட்டு சேருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மாணவர்களுக்கு மன அழுத்தத்தைத் உண்டாக்கும் காரணிகளைக் கண்டறிந்து நிவர்த்தி செய்யவும், மாணவர்கள் ஓய்வெடுக்க உதவவும் தயாராக உள்ளோம்,” என்று கூறினார்.
அதேபோல் மெட்டா நிறுவனம் கடந்த மூன்று ஆண்டுகளில் “தேர்வுக்கு அப்பால்: தேர்வு அழுத்தத்தை நிர்வகித்தல்” என்ற வழிகாட்டி புத்தகம், பாதுகாப்பு கருவிகள் மற்றும் பல அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.