அமைச்சர் காந்திக்கு கமிஷன் காந்தி என்ற பெயர் இருக்கிறது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,
செஞ்சி மன்னர் தேசிங்கு ராஜா ஜெய்சிங் மீது ஆற்காடு நவாப் சாதத்துல்லாக்கான் தொடுத்த போரில், ராஜா தேசிங்கு வீர மரணமடைய, தன் கணவரை இழந்த துக்கம் தாங்காமல், ராஜா தேசிங்கின் மனைவியான ராணிபாய் தன் உயிரை நீத்தார். இவர்கள் தியாகத்தைப் பறைசாற்றும் விதமாக, ஆற்காடு நவாப் 1771 ஆம் ஆண்டு நிர்மாணித்த நகரம்தான் ராணிப்பேட்டை.
இந்தியாவின் மூன்றாவது ரயில் பாதை 1856 ல் சென்னையில் இருந்து வாலாஜாபேட்டை வரைதான் அமைக்கப்பட்டது. இப்பேர்பட்ட பழமைக்கும் பெருமைக்கும் சொந்தமான ஊர் இது. அன்றைய மதராஸ் மாகாணத்தின் முதல் நகராட்சி வாலாஜாபேட்டை. மிகப் பழமையான நகராட்சி, இன்று வரை எந்த முன்னேற்றமும் இல்லாமல் சரியான சாலை வசதிகள் கூட இல்லாமல் இருக்கிறது. இத்தனை ஆண்டுகள் கடந்தும் மாநகராட்சியாகக் கூட உயர்த்தப்படவில்லை.
ராணிப்பேட்டை தொகுதியில் கலைஞர் கருணாநிதி விதைத்த நஞ்சு, தமிழ்நாடு அரசின் குரோமைட் கெமிக்கல்ஸ் நிறுவனம். இந்த தொழிற்சாலை பயன்பாட்டில் இருந்த போது, குரோமியம் கழிவுகளை சரியாக வெளியிடாத காரணத்தினால், நிறுவனம் மூடப்பட்டு 28 ஆண்டுகள் கடந்தும், 10 கிலோ மீட்டர் சுற்றளவில் குரோமியம் ரசாயனத்தின் தாக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் புற்றுநோயின் தாக்கமும் இருக்கிறது. கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம், தேசிய பசுமைத் தீர்ப்பாணையம், குரோமியம் கழிவுகளை அகற்றுவதில் தமிழக அரசு போதிய கவனம் செலுத்தவில்லை என்று கண்டித்துள்ளது.
சுற்றுசூழல் அமைச்சர் மெய்யனாதனுக்கோ, தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனுக்கோ, சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர் காந்திக்கோ இதற்கெல்லாம் நேரம் இல்லை. அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் பாஜக வெற்றி பெற்றதும், 28 ஆண்டுகளாக இதனால் மக்கள் படும் துன்பத்துக்கு தமிழக பாஜக நிரந்தர தீர்வு வழங்கும்.
ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் காந்திக்கு பொருத்தமே இல்லாத பெயர் வைத்திருக்கிறார்கள். பொது மேடைகளில் கீழ்த்தரமாகப் பேசுவதில் இவர் முதலிடம். இவருக்கு கைத்தறித்துறை அமைச்சர் பதவி கொடுத்ததுக்கு காரணம் இவர் பெயர் காந்தி என்பதால் தான் தவிர இவருக்கு கைத்தறி பற்றி ஒன்றும் தெரியாது என்று இவரே ஒரு அரசு விழாவில் கூறுகிறார். 1994ஆம் ஆண்டு கள்ளச்சாராய வழக்கில் குண்டாஸ் கைதியான இவருக்கு, கள்ளச்சாராயத்தைப் பற்றித்தான் தெரிந்திருக்கும்.
அமைச்சர் காந்திக்கு கமிஷன் காந்தி என்ற பெயர் இருக்கிறது. நெசவுத் தொழிலாளர்களிடம் வேட்டி, புடவை கொள்முதலுக்கு கமிஷன் கேட்பது இவரது முக்கிய பணி. பொங்கல் தொகுப்பில் இலவச காட்டன் வேட்டி சேலை கொடுக்கவேண்டும்.
இந்த வருடம் அதிலும் ஊழல் நடந்திருக்கிறது. விஞ்ஞானத் திருட்டில் திமுகவை மிஞ்ச இந்த உலகத்திலேயே ஆள் கிடையாது. வழக்கமாக வேட்டி நெசவு செய்ய பருத்தி நூல் மட்டுமே பயன்படுத்தப்படும், இந்த ஆண்டு பருத்தி நூல் குறைவாகவும் பாலியஸ்டர் நூல் அதிகமாகவும் வாங்கி நெசவு செய்துள்ளனர்.
கிலோ ₹320 வரை விற்கப்படும் பருத்தி நூலை வாங்காமல், பாதி விலைக்கு ₹160க்கே கிடைக்கும் பாலியஸ்டர் நூல் வாங்கி வேட்டி தயாரித்து மக்களை ஏமாற்றி உள்ளனர். ஒரு வேட்டியை எடுத்து கோவையில் உள்ள ஜவுளி ஆராய்ச்சி மையத்தில் கொடுத்து டெஸ்ட் செய்து பார்த்ததில், இவர்கள் மக்களுக்கு கொடுத்த வேட்டியில் 78 சதவீதம் polyester, வெறும் 22 சதவீதம் மட்டுமே காட்டன் என்று தெரியவந்துள்ளது. உற்பத்தி செலவில் பெரிய அளவில் ஊழல் செய்திருக்கிறார்கள்.
தமிழகத்திலேயே, மத்திய அரசின் திட்டங்கள் குறைவான மக்களைச் சென்றடைந்திருப்பது, ராணிப்பேட்டை தொகுதியில்தான். மக்கள் நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்காமல், திமுக அரசும், பாராளுமன்ற உறுப்பினரும் மக்களை வஞ்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார பாராளுமன்ற உறுப்பினர் அரக்கோணம் பாராளுமன்ற உறுப்பினரான ஜெகத்ரட்சகன் சமீபத்தில் அவருக்குச் சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில், இவர் 1250 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருப்பது தெரிய வந்தது. இவரால் ஆற்காடுக்கு எந்த பயனும் இல்லை.
ராணிப்பேட்டை மாவட்டத்தில், 22,011 பேருக்கு பிரதமரின் வீடு திட்டம் மூலமாக வீடு, 1,89,334 வீடுகளில் குழாயில் குடிநீர், 1,20,391 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 87,794 பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 7,086 பேருக்கு 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு, 63,451 விவசாயிகளுக்கு விவசாய கௌரவ நிதி வருடம் 6000 ரூபாய் என இதுவரை 30,000 ரூபாய், முத்ரா கடன் 319 கோடி ரூபாய் என பிற மாவட்டங்களை ஒப்பிடுகையில், மத்திய அரசின் நலத்திட்டங்களை, தொகுதி மக்களுக்குக் குறைந்த அளவிலேயே எடுத்துச் சென்றிருக்கின்றன.
வரும் பாராளுமன்றத் தேர்தலில், ஊழல் குடும்ப ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் திமுகவை முழுமையாகப் புறக்கணிப்போம். பாரதப்பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்க, தமிழகம் முழுவதும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்போம் எனத் தெரிவித்தார்.