திமுக கொடுத்த பெரும்பாலான வாக்குறுதிகள் வெறும் ஏமாற்று வேலையாகவே இருந்திருக்கிறது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை செய்யாறு சட்டமன்றத் தொகுதியில் நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,
நெற்றியில் திருநாமம் இடப் பயன்படுத்தும் நாமக்கட்டி தயாரிப்பில் புகழ்பெற்று விளங்கும் ஜடேரி, இந்தத் தொகுதிக்கு உட்பட்டது. ஜடேரி நாமக்கட்டிக்கு, கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், புவிசார் குறியீடு வழங்கிப் பெருமைப்படுத்தியுள்ளார்.
திமுக கொடுத்த பெரும்பாலான வாக்குறுதிகள் வெறும் ஏமாற்று வேலையாகவே இருந்திருக்கிறது. 30 வயதுக்கு உட்பட்ட தமிழகக் கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்தார்கள்.
இந்த வாக்குறுதியை நிறைவேற்ற அரசுக்கு 16,500 கோடி தேவைப்படும். அது தெரிந்தும், தேர்தலில் வாக்குகள் வாங்க போலி வாக்குறுதி கொடுத்து இளைஞர்களை ஏமாற்றியிருக்கிறார்கள்.
இதே வாக்குறுதியை, 2019 ஆம் ஆண்டு தேர்தலின்போதும் தேர்தல் வாக்குறுதி எண் 48ல், திமுக கொடுத்தது. ஒரே வாக்குறுதியை இரண்டு தேர்தல்களில் கொடுத்து மக்களை ஏமாற்றி வாக்குகள் வாங்கியிருக்கிறார்கள்.
ஆட்சிக்கு வந்து முதல் கையெழுத்தில் நீட் தேர்வை ஒழிப்போம் என்று மற்றொரு வாக்குறுதி கொடுத்தார்கள். திமுகவினர் நடத்தும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் வருமானத்துக்காக, ஏழை எளிய மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி கிடைப்பதை உறுதி செய்யும் நீட் தேர்வை எதிர்க்கிறார்கள்.
திமுக ஆட்சிக்கு வந்து, இரண்டு முறை திருவண்ணாமலை வந்த முதலமைச்சர் ஸ்டாலின் செய்தது, அமைச்சர் வேலுவின் மருத்துவக் கல்லூரி கட்டிடங்களைத் திறந்து வைத்ததுதான். இதுதான் திமுகவின் நீட் ஒழிப்பு.
செய்யாறு தொகுதியைச் சேர்ந்த எளிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவி கவிப்பிரியா பத்மராஜ், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தார். நீட் தேர்வு வேண்டாம் என்று சொல்லும் திமுகவின் மூத்த அமைச்சர்கள் பலர், கல்லூரிக்கே செல்லாதவர்கள்.
இப்படி ஒரு தேர்தல் வாக்குறுதியையும் முறையாக நிறைவேற்றாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 99% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாகப் பொய் சொல்கிறார். நமது பாரதப் பிரதமர் மோடி அவர்கள், கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது, 295 வாக்குறுதிகள் கொடுத்தார்.
மீனவர்களுக்கு தனித் துறை உருவாக்கி 10,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு, ஜல்ஜீவன் திட்டம் மூலம் ஒவ்வொரு வீட்டுக்கும் குழாயில் குடிநீர், பழங்குடியினருக்கு அரசியல் அங்கீகாரம், நாட்டின் குடியரசுத் தலைவர் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்தான்.
பழங்குடியினர் மேம்பாட்டுக்கு 24,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு, 10,000 விவசாய உற்பத்தி நிலையங்கள், முத்தலாக் சட்டம், பெட்ரோலுடன் எத்தனால் கலந்து எரிபொருளாகப் பயன்படுத்துதல், சிறுகுறு விவசாயிகளுக்கு ஓய்வூதியம், நீர் மேலாண்மைக்கு தனித் துறை, ஆர்டிகிள் 370 நீக்கம், ராமர் கோவில் கட்டுதல் என பல ஆயிரம் கோடி மதிப்புள்ள முக்கியமான, இத்தனை ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத கடினமான வாக்குறுதிகள் உள்ளிட்ட 295 வாக்குறுதிகளையும் நிறைவேற்றியிருக்கிறார்.
வரும் 2024 பாராளுமன்றத் தேர்தல் வாக்குறுதிகளையும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றிவிட்டுத்தான், 2029 தேர்தலின்போது மக்களிடம் பாஜக வரும். சொன்னதைச் செய்யும் ஆற்றல் மிகுந்த தலைவர் மோடி. அதுதான் மோடி கேரன்டி.
திருவண்ணாமலை விவசாய நிலத்தை, பாதுகாக்க போராடிய விவசாயிகளுக்கு எதிராக குண்டாஸ் சட்டத்தில் வழக்கு தொடர்ந்த திமுக, தமிழக பாஜக போராட்டம் அறிவித்த பின்னர் அதனை ரத்து செய்தது. எனினும் மீதமுள்ள வழக்குகளை எதிர்த்து விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக பாஜக நீதிமன்றத்தில் வாதாடும்.
செய்யாறு விவசாயிகளின் கோரிக்கைகளான, சர்க்கரை ஆலை, மின்சாரக் கட்டணம், கரும்பிலிருந்து வரும் எத்தனாலை பெட்ரோலுடன் கலந்து எரிபொருளாகப் பயன்படுத்தப்படுவது அதிகரித்தல் உள்ளிட்டவற்றை, 2026 தேர்தல் வாக்குறுதிகளாகவே அறிவித்து, விவசாயிகள் பிரச்சினை தீர பாஜக உழைக்கும்.
செய்யாறுக்கு புதிய வேளாண்மைக் கல்லூரியைக் கொண்டு வருவதும், 2026 ஆம் ஆண்டிற்கான பாஜகவின் தேர்தல் வாக்குறுதியாக அமையும்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், வளர்ச்சி அரசியலை நோக்கி நமது நாடு செல்கிறது. நமது பிரதமர் கரங்களை வலுப்படுத்த, வரும் பாராளுமன்றத் தேர்தலில், தமிழகம் முழுவதும் பாஜக வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்து பாராளுமன்றம் அனுப்ப தமிழக மக்கள் உடன் இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.