பாகிஸ்தான் பொதுத்தேர்தலை முன்னிட்டு இன்று பாதுகாப்புக் காரணங்களுக்காக நாடு முழுவதும் மொபைல் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் இன்று பொதுத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு சில பகுதிகளில் இரட்டை பயங்கரவாதத் தாக்குதல்களில் 30 பேர் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து புதிய நிர்வாகத்தைத் தேர்ந்தெடுப்பதற்காக மக்கள் வாக்களிக்கும்போது எந்தவித பிரச்னையும் ஏற்படாத நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் , நாடு முழுவதும் மொபைல் சேவைகளை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை மேற்கோள் காட்டி தேர்தலில் எவ்வித இடையூறுகளும் இல்லாமல் நடக்கவேண்டும் என்பவதற்காக தேர்தல் நாளான இன்று நாடு முழுவதும் மொபைல் போன் சேவைகளை நிறுத்தி வைத்துள்ளதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை இடைவேளையின்றி நடைபெறுகிறது. மொத்தம் 128,585,760 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க நாடு முழுவதும் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கராச்சி, பெஷாவர் உள்ளிட்ட சில நகரங்களில் தொலைபேசி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.