பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானியை பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
நாட்டின் முன்னாள் துணை பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான எல்.கே.அத்வானிக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்து கௌரவித்துள்ளது. அவருக்கு பாரதப்பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில், நம் காலத்தில் மிகவும் மதிக்கப்படும் அரசியல்வாதிகளில் ஒருவராக, அத்வானி ஜி இந்தியாவின் வளர்ச்சிக்கு செய்த பங்களிப்பு மகத்தானது. அடிமட்ட தொண்டனில் தொடங்கி நமது நாட்டின் துணை பிரதமராக உயர்ந்தவர். உள்துறை அமைச்சராகவும், தகவல் தொடர்பு துறை அமைச்சராகவும் சிறப்பாக பணியாற்றினார். அவரது நாடாளுமன்ற விவாதங்கள் முன்னுதாரணமாக இருந்துள்ளன.
தேசிய ஒருமைப்பாடு மற்றும் கலாச்சார மறுமலர்ச்சியை மேம்படுத்துவதற்கு இணையற்ற முயற்சிகளை மேற்கொண்டவர் அத்வானி. அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட இந்த தருணம் எனக்கு மிகவும் உணர்ச்சி மிகுந்தது. அவருடன் பழகுவதற்கும், அவரிடமிருந்து கற்றுக்கொள்வதற்கும் எண்ணற்ற வாய்ப்புகள் கிடைத்ததை நான் எப்போதும் எனது பாக்கியமாகக் கருதுவேன் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் அத்வானியை அவரது இல்லத்தில் இன்று சந்தித்து பேசினார். அப்போது பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.