வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை எனவும் முந்தைய அளவான 6.5 சதவீதத்திலேயே தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.
ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகும். ரெப்போ விகிதம் உயரும்போது வீடு மற்றும் வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும்.
இருமாதங்களுக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூடி, ரெப்போ விகிதம் தொடர்பாக முடிவுகள் எடுப்பது வழக்கம். இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், ரெப்போ விகிதத்தில் மாற்றம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த முடிவுக்கு ஆர்பிஐ நிதிக் கொள்கைக் குழுவின் 6 உறுப்பினர்களில் 5 பேர் சாதமாக ஒப்புதல் அளித்தனர்.
முன்னதாக, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் வரை 5 முறை ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தில் மாற்றம் செய்யாமல் அதற்கும் முந்தைய அளவான 6.5 சதவீதத்திலேயே தொடரச் செய்தது.
இந்நிலையில் நடப்பாண்டில் முதல் கூட்டத்திலும் முந்தைய வட்டி விகிதமே நீடிக்கும் எனத் தெரிவித்துள்ளது. பணவீக்கம் 4 சதவீத என்ற இலக்கை ஒட்டியே நிலவுவதாலும், பொருளாதாரம் மீண்டெழுவதாலும் ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதத்திலேயே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்,
2025 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ரியல் ஜிடிபி அளவு 7 சதவீதமாக இருக்கும் என ஆர்பிஐ கணித்துள்ளது. இதில் முதல் காலாண்டில் 7.2 சதவீதமாகவும், 2வது காலாண்டில் 6.8 சதவீதமாகவும், 3வது காலாண்டில் 7 சதவீதமாகவும், 4வது காலாண்டில் 6.9 சதவீதமாகவும் இருக்கும் எனத் தெரிவித்தார்.
ஆர்பிஐ இந்தியாவின் உள்நாட்டு வர்த்தகம் மிகவும் வலிமையாக இருப்பதாகத் தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டில் இருந்த வர்த்தக நகர்வு மற்றும் டிமாண்ட் 2025 ஆம் ஆண்டிலும் தொடரும் எனத் தெரிவித்தார்.
உலகில் பல நாடுகளில் கடன் அளவு அதிகரித்துள்ளது கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது, இது சர்வதேச நிதியியல் தளத்தைக் கட்டாயம் பாதிக்கும் எனத் தெரிவித்தார். ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையின் படி இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பில் குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.
ஜனவரி 26 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் மொத்த அந்நியச் செலாவணி கையிருப்பு 616.73 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. கடந்த இரு வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு 591 மில்லியன் டாலர் உயர்ந்துள்ளது.
இந்த வாரம் 616.73 பில்லியன் டாலர் அளவீட்டை பதிவு செய்துள்ளது. இது கடந்த வாரத்திற்கு முன்பு கையிருப்பில் 2.79 பில்லியன் டாலர் குறைந்தது. இதன் விளைவாக ஜனவரி 19, 2024 இல் முடிவடைந்த வாரத்தில் மொத்தம் $618.94 பில்லியன் டாலராக குறைந்தது எனத் தெரிவித்தார்.