சபரிமலை இரயில் திட்டத்துக்கு, இரண்டு மாற்று வழித்தடங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது, கேரளாவில் இரயில்வே கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு உறுதியாக உள்ளது. சபரிமலை இரயில் திட்டம், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு இரயில் சேவையை வழங்குவதை நோக்கமாக கொண்டது. ஆனால், இத்திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துவதிலும், தனது பங்கு நிதியை அளிப்பதிலும், கேரள அரசு போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை.
இதன் காரணமாக, சபரிமலை இரயில் திட்டம் அடைந்திருக்க வேண்டிய முன்னேற்றத்தை அடையவில்லை. தற்போது, சபரிமலை இரயில் திட்டத்துக்கு 2 மாற்று வழித்தடங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
அதில், ஒரு வழித்தடம், ஐயப்பன் கோவிலுக்கு அருகாமையில் முடிவடையும். மேலும், மற்றொரு வழித்தடம், கோவிலுக்கு 25 கிலோமீட்டருக்கு முன்பே முடிவடைந்து விடும். இரு வழித்தடங்களையும் முழுமையாக ஆய்வு செய்து முடித்த பிறகு, இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.
செங்கானூரில் இருந்து பம்பை வரையிலான இரயில் பாதை, ஒரு புதிய வழித்தடம். அதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. சரியான வழித்தடத்தை தேர்வு செய்து, விரிவான திட்ட அறிக்கை தயாரித்தவுடன், அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று கூறினார்.