தி.மு.க அரசின் அலட்சியம் காரணமாக மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மர்மக் காய்ச்சல் பரவி வருவதாகவும், இதுவரை 14 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர்.
மதுரையில் கடந்த சில தினங்களாக, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மர்மக் காய்ச்சல் பரவி வருகிறது. இதில், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், அலுவலகம் செல்வோர் எனப் பல தரப்பினும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மதுரை உசிலம்பட்டி அருகே மர்மக் காய்ச்சலால் 14 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று ஒரே நாளில் மட்டும் 4 குழந்தைகள் உசிலம்பட்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வேகமாகப் பரவி வரும் மர்மக் காய்ச்சலால், உசிலம்பட்டி மருத்துவமனையில் 8 பேரும், மதுரை ராஜாஜி மருத்துவமனையில் 2 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, மொக்கத்தான்பாறை மலைக் கிராமத்தில் மர்மக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதாகவும், இதில், பெரும்பாலும் குழந்தைகள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், இது தொடர்பாக, மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.