திருவேற்காடு கருமாரியம்மன் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலி காணாமல் போன சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவேற்காடு கருமாரியம்மன் இத்தலத்தில் சுயம்புவாக உள்ளார். தினமும் வெளியூர்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
விடுமுறை தினங்கள், பௌர்ணமி, செவ்வாய் வெள்ளி கிழமைகளில் கோயிலில் பக்தர்களின் வருகை அதிக அளவில் இருக்கும். தமிழக அரசுக்கு மிக அதிகமான வருவாயை ஈட்டித்தரும் கோயில்களில் இது முக்கியமான கோவிலாகும்.
கடன், கந்து வட்டி, வியாதி வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் வந்து வேண்டிக் கொண்டால், தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாது நம்பிக்கை. இதற்காக, பூட்டுகளைக் கொண்டு வந்து சந்நிதி முன்பு பூட்டி தொங்க விட்டுச் செல்கின்றனர். இப்படி பல்வேறு பெருமை பெற்ற இந்த கோவில், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த நிலையில் கோவில் கருவறையில் உற்சவர் கருமாரியம்மன் கழுத்தில் இருந்த 8 சவரன் தங்க சங்கிலி காணாமல் போனது. காலையில் கோவிலுக்கு வந்து பார்த்த அதிகாரிகள், அம்மன் கழுத்தில் தங்க சங்கிலி காணாமல் போனது கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக, தங்களது உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துவிட்டு, போலீசாருக்கும் தகவல் அளித்தனர்.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.