ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பொருளாதார சீர்கேடுகளை அடுத்து ஆட்சிக்கு வந்த பாஜக கூட்டணி வெற்றிகரமாக முறியடித்ததாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய இடைக்கால பட்ஜெட்டில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் 10 ஆண்டு கால பொருளாதாரச் செயல்பாடுகள் மற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் 10 ஆண்டு கால பொருளாதாரச் செயல்பாடுகளுடன் ஒப்பிட்டு வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில் மக்களவையில் இந்தியப் பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். 2014ஆம் ஆண்டு பாஜக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தபோது, பொருளாதாரம் பலவீனமான நிலையில் இருந்தது. பொது நிதி மோசமான நிலையில் இருந்தது. பொருளாதார முறைகேடு மற்றும் நிதி ஒழுங்கின்மை இருந்தது. பரவலாக ஊழல் காணப்பட்டது என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தை படிப்படியாக சீர்படுத்தும் பொறுப்பும், நிர்வாக அமைப்புகளை சீரமைக்க வேண்டிய பொறுப்பும் மகத்தானது.அப்போது மோசமான நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவதை நமது அரசு தவிர்த்தது.அது எதிர்மறையான விளைவை கொடுத்து நம்பிக்கையை குலைத்திருக்கும்.
முதலீட்டாளர்கள் உட்பட அனைவருக்கும் நம்பிக்கையை அளிப்பதும், உள்நாட்டு மற்றும் உலகளாவிய முதலீடுகளை ஈர்ப்பதும் மற்றும் மிகவும் தேவையான சீர்திருத்தங்களுக்கு ஆதரவை உருவாக்குவதும் காலத்தின் தேவையாக இருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி, அதை வளர்ச்சிப் பாதையில் அமைத்துவிட்டோம்,ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தால் ஒரு மரபுவழியாக விட்டுச் சென்ற சமாளிக்க முடியாத சவால்களை பொது களத்தில் வைப்பது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்
2014க்கு முந்தைய சகாப்தத்தின் ஒவ்வொரு சவால்களும் நமது பொருளாதார மேலாண்மை மற்றும் நமது நிர்வாகத்தின் மூலம் முறியடிக்கப்பட்டன. இவை நாட்டை நிலையான உறுதியான பாதையில் கொண்டு சென்றுள்ளன. இது எங்களின் சரியான கொள்கைகள், உண்மையான நோக்கங்கள் மற்றும் சரியான முடிவுகளால் சாத்தியமானது என்றும் வெள்ளை அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.