ஹமாஸ் தீவிரவாதிகள் விடுத்துள்ள போர் நிறுத்த ஒப்பந்தம் ஒரு மாயை, நாங்கள் முழுமையான வெற்றியை நோக்கி செல்கிறோம் என்று கூறி, போர் நிறுத்த கோரிக்கையை இஸ்ரேல் பிரதமர் நிராகரித்துள்ளார்.
பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தினர்.
இதை அடுத்து, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரை இஸ்ரேல் தொடங்கியது. விமானப்படை, கப்பல்படை, தரைப்படை என முப்படைகளையும் ஏவிவிட்டு நடத்தி வரும் தாக்குதலில் காஸா நகரமே உருக்குலைந்து போய்க் கிடக்கிறது. இந்த போரில் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு சரியான பதிலடியை இஸ்ரேல் கொடுத்து வருகிறது.
ஹமாஸ் தீவிரவாதிகளை அழிக்காமல் போரை நிறுத்த மாட்டோம் என்ற முடிவில் இஸ்ரேல் உள்ளது. இதனால், நான்கு மாதங்களாகியும் போர் நீடித்து வருகிறது. இந்த போரில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்களும், மக்களும் உயிரிழந்தனர். போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகளும், முயற்சி செய்து வருகின்றன.
இதற்கிடையே, நிரந்தர போர் நிறுத்த ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும் என்று ஹமாஸ் தீவிரவாதிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால், ஹமாஸ் தீவிரவாதிகளின் கோரிக்கையை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு ஏற்க மறுத்துள்ளார்.
ஹமாஸ் விடுத்துள்ள போர் நிறுத்த ஒப்பந்தம் ஒரு மாயை. நாங்கள் முழுமையான வெற்றியை அடையும் வரை போர் தொடரும் என்று கூறியுள்ளார்.