கர்நாடகா மாநிலம் ராய்ச்சூர் வழியாக செல்லும் கிருஷ்ணா நதியில், பாலம் கட்டும் பணியின் போது, சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் மற்றும் விஷ்ணு சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் தேவசுகூர் கிராமம் வழியாக செல்லும் கிருஷ்ணா நதியில் பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், பாலம் கட்டும் பணியின் போது, ஆற்றில் சிவலிங்கம் மற்றும் விஷ்ணு சிலை இருப்பதை சிலர் பார்த்தனர்.
அப்பகுதியில் இருந்தவர்கள் ஆற்றில் இருந்த சிலைகளை பத்திரமாக மீட்டு, உடனடியாக உள்ளூர் நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தனர்.
இதுகுறித்து இந்திய தொல்லியல் துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த இந்திய தொல்லியல் துறையினர், சிலைகளை மீட்டு, பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றனர்.
ஆற்றில் கிடைக்க பெற்ற சிவலிங்கம் மற்றும் விஷ்ணு சிலை சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் என்று அதிகாரிகள் கூறினர்.
விஷ்ணு சிலையைச் சுற்றி ‘தசாவதாரங்கள்’ செதுக்கப்பட்டுள்ளன. விஷ்ணுவின் சிலைக்கு நான்கு கைகள் உள்ளன. இரண்டு உயர்த்தப்பட்ட கைகளில் சங்கு மற்றும் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளன.
கிருஷ்ணா ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ள, விஷ்ணுவின் சிலை, சமீபத்தில் அயோத்தியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள குழந்தை இராமரின் திருமேனியுடன் ஒத்துப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.