சென்னை – பெங்களூரு பசுமை விரைவுச் சாலை பணிகள் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிவடையும் என்று மத்திய சாலைப் போக்கு வரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மக்களவையில் சென்னை – பெங்களூரு பசுமை விரைவுச் சாலை பணிகள் குறித்து பேசிய மத்திய சாலைப் போக்கு வரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, ” இந்த ஆண்டின் டிசம்பர் இறுதிக்குள் சென்னை பெங்களூரு பசுமை விரைவுச் சாலை பணிகளை முடிக்க எங்களால் முடிந்த அளவுக்கு முயற்சித்து வருகிறோம்.
சென்னை-பெங்களூரு விரைவுச்சாலையானது தமிழகம் மற்றும் கர்நாடகாவின் தலைநகரங்களை எட்டு வழிச்சாலை வழியாக இணைக்கும். இது 120 கிமீ வேகத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு மற்றும் சென்னை இடையேயான தூரத்தை 300 கிமீ முதல் 262 கிமீ வரை குறைக்கிறது. இந்த கிரீன்ஃபீல்ட் விரைவுச் சாலை வழியாக இரு நகரங்களுக்கு இடையில் பயணிக்க ஒருவருக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே தேவைப்படும். இந்த திட்டத்திற்கான செலவு தொகை 16,730 கோடி எனத் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இந்த திட்டம் குறித்து பேசியுள்ளேன். அவரிடம் தமிழகத்தில் நெடுஞ்சாலைகள் அமைப்பதில் தேசிய நெடுஞ்சாலைத் துறை எதிர்கொள்ளும் பிரச்சனைகளை குறித்து தெரிவித்தேன்.
இந்த விவகாரத்தை அரசியலாக்க விரும்பவில்லை. இந்த திட்டத்தை விரைந்து முடிக்க மாநில அரசு அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுடன் ஆலோசிக்கவும் தயாராக இருப்பதாக தெரிவித்தேன்” என்று தெரிவித்தார்.