சென்னையில் 13 தனியார் பள்ளிகளுக்கு, மின்னஞசல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை கண்டுபிடிப்பதற்காக இன்டர்போல் உதவியை நாட சென்னை போலீஸ் முடிவு செய்துள்ளது.
நந்தம்பாக்கம், அண்ணா நகர், கோபாலபுரம், பெரம்பூர் உள்ளிட்ட 13 பள்ளிகளுக்கு, 8-ஆம் தேதி மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் பள்ளிக்கு சென்ற குழந்தைகள் பாதியிலேயே பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.
பின்னர், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் முழுமையாக சோதனை மேற்கொள்ளப்பட்டது. மிரட்டல் விடுத்தவர்கள் அங்கீகரிப்படாத தனியார் நெட்வொர்க் மூலம் மெயில் அனுப்பியதால் அதன் ஐ.பி முகவரியை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சைபர் குற்ற வல்லுநர்கள் உதவியால் ஐபி முகவரியைக் கண்டுபிடிக்க முயற்சித்து வரும் நிலையில்,வெளிநாடுகளின் தனியார் நெட்வொர்க்கை பயன்படுத்தி மெயில் அனுப்பி இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்தின் உதவியோடு இன்டர்போல் உதவியை நாட சென்னை போலீசார் முடிவு செய்துள்ளனர்.