முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நரசிம்ம ராவின் பேரன் என்.வி சுபாஷ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, நாட்டின் உயரிய விருது வழங்கியதற்கு நன்றி. தெலுங்கானா பாஜகவுக்கு நன்றி.
நரசிம்மராவ் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் பிரதமர் மோடி அவருக்கு பாரத ரத்னா விருது அறிவித்து கௌரவம் செய்துள்ளார். 2004 முதல் 2014ஆம் ஆண்டு வரை, மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது கூட அவருக்கு எந்த விருதும் அறிவிக்கப்படவில்லை. காங்கிரசின் தோல்விகளுக்கு நரசிம்மராவை பலிகடா ஆக்குவதையே காந்தி குடும்பம் நோக்கமாக கொண்டிருந்தது என தெரிவித்தார்.
இதேபோல் பிஆர்எஸ் எம்எல்சியும், நரசிம்ம ராவின் மகளுமான சுரபி வாணி தேவியும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். நரசிம்ம ராவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது தங்கள் குடுமபத்தினருக்கு கிடைத்த பெரிய அங்கீகாரம் என அவர் கூறியுள்ளார்.
ராவ் பாஜகவில் இல்லாதது ஆச்சரியம் தான். ஆரம்பம் முதல் காங்கிரஸுடன் இணைந்து பணியாற்றியவர், ஆனால் பாஜக அவருக்கு பாரத ரத்னா வழங்கியுள்ளது. இது ஒரு சிறந்த தருணம்.பாஜக அரசை நாங்கள் பாராட்ட கடமைப்பட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.