14,700 வேலை வாய்ப்புகள் வரும் என முதலமைச்சர் ஸ்டாலின் சொன்னார், இதுவரை யாருக்கும் வேலை கிடைக்கவில்லை எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதியில் நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,
இங்குள்ள வீரராகவ பெருமாள் கோவில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். ஆழ்வார்களின் தமிழால் சிறப்பு செய்யப்பட்ட பூமி திருவள்ளூர்.
தொகுதி சட்டமன்ற உறுப்பினர் V.G. ராஜேந்திரன் திருவள்ளூர் பாண்டூரில் நடத்தி வரும் மருத்துவக் கல்லூரிக்காக, கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்தவர். பல ஏழை, எளிய, சாமானிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவ மாணவியரின் மருத்துவக் கல்விக் கனவை நீட் நிறைவேற்றி வருகிறது.
கடந்த 2023ஆம் ஆண்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 92. கொள்ளை அடிப்பதையே கொள்கையாக கொண்ட திமுகவினருக்கு கல்வியை பற்றிப் பேச எந்தத் தகுதியும் இல்லை.
தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு, கடந்த 5 வருடங்களாக தொகுதி பக்கமே எட்டிப் பார்க்காமல், தற்போது திடீரென வந்து ராமர் கோவிலை ஏன் அதானி திறந்து வைத்தார் என்று குழம்பியிருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியில் யார் அதிகமாக உளறிக் கொண்டிருக்கிறார்கள் என்ற ஒரு போட்டி நடந்து கொண்டிருக்கிறது. தனது வெற்றிக்குக் காரணம் திமுக தான் என்று பேசியவர் இவர். தமிழகத்தில் தேர்தலில் இடம் வாங்கவே காங்கிரஸ் கட்சி இருக்கிறது என்று தமிழக அமைச்சர் ராஜ கண்ணப்பன் சொன்னதில் எந்தத் தவறும் இல்லை
முதலமைச்சர் ஸ்டாலின், பகுதி நேர முதலமைச்சர் ஆகியிருக்கிறார்.
இதுவரை மூன்று முறை முதலீடு என்ற பெயரில் வெளிநாடு பயணம் சென்றுள்ள முதலமைச்சர், கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் துபாய் சென்று வந்தபின், ரூ. 6,100 கோடி முதலீடு வரும் என்று சொன்னார் இரண்டு ஆண்டுகள் கடந்தும், இன்னும் 1 ரூபாய் கூட வரவில்லை. துபாய் நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனம், தமிழகத்தில் ரூ.1,000 கோடி முதலீடு செய்யப்போகிறார்கள் என்று சொன்னார்கள்.
அந்த நிறுவனமும் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையும் ஒரே விலாசத்தில் இயங்கி வருகிறது என்பதைக் கண்டறிந்து, துபாயிலிருந்து வரப் போவது யாருடைய பணம் என்ற கேள்வி எழுப்பியதும், அந்த முதலீட்டை மறந்து விட்டார்கள்.
14,700 வேலை வாய்ப்புகள் வரும் என முதலமைச்சர் சொன்னார். யாருக்கும் வேலை கிடைக்கவில்லை. கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம், 9 நாட்கள் பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்குச் சென்று, ரூ.1,258 கோடிக்கு 14 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாகக் கூறினார்.
எத்தனை கோடிகள் வந்தது என அவர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மீண்டும் இந்த ஆண்டு ஜனவரி மாதம், சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாடு முடிந்து பத்து நாள்களில், மறுபடியும் ஸ்பெயினுக்கு முதலீடு ஈர்க்கச் செல்கிறோம் என்று சென்று வந்துள்ளார்.
ஒவ்வொரு முறையும் வெளி நாடுகளுக்குச் சென்று வெறுங்கையுடன் திரும்பி வரும் முதலமைச்சர், முதலீடு ஈர்க்கத்தான் செல்கிறாரா என்ற சந்தேகம் எழுகிறது. தமிழகத்தில் ஏற்கனவே இருக்கக்கூடிய நிறுவனங்கள், அந்த நிறுவனங்களின் விரிவாக்க திட்டங்களுக்கு ஸ்பெயினுக்கு சென்று கையெழுத்திட்ட முதல் முதலமைச்சர் இந்திய அரசியல் வரலாற்றிலேயே முதல்வர் ஸ்டாலின் தான்.
நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் முன்னேற்றத்தில் இலக்கு வைத்துச் செயல்படுகிறார். கடந்த 10 ஆண்டுகளில் சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் பேசிய ஒவ்வொன்றையும் நிறைவேற்றி வருகிறார்.
அவர் பிரதமர் பொறுப்பேற்ற கடந்த 2014ஆம் ஆண்டு சுதந்திர தின உரையில், நல்லாட்சி குறித்துப் பேசினார். கடந்த 9 ஆண்டுகளில், நமது நாட்டின் உள்கட்டமைப்புக்காக, 9 ஆண்டுகளில், அனைத்து மாநிலங்களுக்கும் நமது மத்திய அரசு வழங்கிய நிதி 100 லட்சம் கோடி ரூபாய்.
காங்கிரஸ், திமுக ஆட்சி செய்த 2004 – 2014 வரையிலான, 10 ஆண்டுகளில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட நிதி 30 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே. காங்கிரஸ் ஆட்சியில், தினமும் ஊழல் என்ற செய்தி மட்டுமே மக்களுக்கு வந்துகொண்டிருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் நமது பிரதமர் மோடி அவர்களின் மத்திய அரசில், ஒரு ரூபாய் கூட ஊழல் இல்லை.
கடந்த 2014 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்த விமான நிலையங்களின் எண்ணிக்கை 74. தற்போது 149 விமான நிலையங்கள் இருக்கின்றன. கடந்த 67 ஆண்டுகளாக இருந்தவற்றை, பிரதமர் மோடி ஆட்சியில், ஒன்பது ஆண்டுகளில் அனைத்தையும் இரட்டிப்பு செய்திருக்கிறோம். கடந்த 2015ஆம் ஆண்டு சுதந்திரதின உரையில், 2022ஆம் ஆண்டிற்குள், பொருளாதாரத்தில் முன்னேறிய நாடக இந்தியா மாறும் என்றார்.
வீடு இல்லாதோருக்கு வீடு வழங்குவேன் என்றார் நமது பிரதமர். 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், உலகின் 5ஆம் பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறியது. 4 கோடி பேருக்கு மோடி இலவச வீடு வழங்கியுள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு சுதந்திர தின உரையில், ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற கோட்பாட்டினை முன்வைத்தார் பிரதமர் மோடி. காஷ்மீரை இந்தியாவுடன் முழுமையாக இணைத்தார். வடகிழக்கு மாநிலங்களை பொருளாதார முன்னேற்றம் அடைய செய்தார். காசி தமிழ்ச் சங்கமம், சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமம், காசி தெலுங்கு சங்கமம், இளைஞர்களுக்கான யுவ சங்கமம் என நாட்டு மக்கள் அனைவரும் ஒன்று தான் என்ற உணர்வை மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளார் மோடி.
மேலும், 2017ஆம் ஆண்டு சுதந்திர தின உரையில், இளைஞர்கள் அதிகம் உள்ள நமது நாட்டில், டிஜிட்டல் பொருளாதாரத்தை முன்னெடுத்து நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வோம் என்றார் பிரதமர். இன்று உலகத்தின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் தலைநகரமாக நமது நாடு இருக்கிறது.
இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் டிஜிட்டல் Payment முறையை பயனப்டுத்துகின்றனர். கடந்த மாதம் மட்டும் இந்தியாவில் 18 லட்சம் கோடி ரூபாய் டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. 50 கோடி வங்கி கணக்குகளை உருவாக்கியதன் மூலம் டிஜிட்டல் payment முறையை மக்கள் பின்பற்றுவது எளிதானது. இப்படி படிப்படியாக இலக்கு வைத்துச் செயல்பட்டு வருகிறார் நமது பிரதமர்.
கடந்த 2018ஆம் ஆண்டு சுதந்திர தின உரையில் 75ஆம் சுதந்திர தினத்திற்கு முன்பு விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவோம் என்றார் பிரதமர் மோடி. நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு, விவசாயிகள் கௌரவ நிதி, கிசான் அட்டை, மானிய விலையில் யூரியா உரம் என விவசாயிகளின் செலவைக் குறைத்து வருமான த்தை அதிகப்படுத்தியுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு சுதந்திர தின உரையில், மூன்று பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஒரு அரசு மருத்துவ கல்லூரி கண்டிப்பாக உருவாக்கப்படும் என்றார் மோடி. தமிழகத்திற்கு மட்டுமே 15 புதிய மருத்துவ கல்லூரிகளை வழங்கியுள்ளார் மோடி.
மாவட்டம் தோறும் ஒரு அரசு மருத்துவ கல்லூரி வேண்டும் என்ற இலக்கை நோக்கி பயணிப்பவர் மோடி. 2014ஆம் ஆண்டு 57,592 ஆக இருந்த மருத்துவக் கல்வி இடங்கள் இப்போது இரண்டு மடங்கு அதிகரித்து, 1,08,940 இடங்களாக உள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு சுதந்திர தின உரையில், நமது உள்ளூர் உற்பத்திக்கும் உற்பத்தியாளர்களுக்கும் முன்னுரிமை வழங்குங்கள் என்றார் மோடி. Vocal for local என்ற சிந்தனையைப் பறைசாற்றும் வகையில் கடந்த தீபாவளி பண்டிகையின் போது மட்டும் 4 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது.
மேலும் கடந்த 2021ஆம் ஆண்டு சுதந்திர தின உரையில், அடுத்த 25 ஆண்டுகள் நமது நாட்டின் அமிர்த காலம், உலகின் தலை சிறந்த உள்கட்டமைப்பு கொண்ட நாடாக இந்தியா உருவாக நமது அரசு செயல்படும் என்று கூறியிருந்தார்.
இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில், 11,11,111 கோடி ரூபாய் நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கடந்த 2004ஆம் ஆண்டு உள்கட்டமைப்பை மேம்படுத்த செலவிட்ட நிதி வெறும் 1.04 லட்சம் கோடி. 2014ஆம் ஆண்டு உள்கட்டமைப்பை மேம்படுத்த செலவிட்ட நிதி ரூ.1.88 லட்சம் கோடி. இன்று பத்து மடங்கு அதிக செலவு செய்யப்படுகிறது.
கடந்த 2022ஆம் ஆண்டு சுதந்திர தின உரை 75 ஆண்டுகள் நாம் சுதந்திரம் அடைந்து நிறைவு பெற்ற வருடம் இது. அடுத்த 25 ஆண்டுகள் இந்த நாட்டின் வளர்ச்சியில் பெண்களில் பங்களிப்பு கடந்த 75 ஆண்டுகளை ஒப்பிடுகையில் பல மடங்கு இருக்கும் என்றார் மோடி.
பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பாடுபடுகிறார் மோடி. கடந்த 9 ஆண்டுகளில், 7 கோடி மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி, முத்ரா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 28 லட்சம் கோடி ரூபாயில் 65 சதவீதம் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு சுதந்திர தின உரையில், அடுத்த 25 ஆண்டுகளில், 2047ஆம் ஆண்டு நமது 100வது சுதந்திர தினத்தின் போது, நமது நாடு ஒரு வளர்ந்த நாடக இருக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
நிச்சயமாக, சொல்வதைச் செய்து காட்டுவார் நமது பிரதமர். அதுதான் மோடி கேரன்டி. 2019 ஆம் ஆண்டு நமது பிரதமர் கொடுத்த 295 தேர்தல் வாக்குறுதிகளில், 295 வாக்குறுதிகளையும் நிறைவேற்றியிருக்கிறோம். ஆனால் திமுக, 511 தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்து விட்டு, 20 தேர்தல் வாக்குறுதிகள் கூட முறையாக நிறைவேற்றாமல் இருக்கிறது.
வரும் பாராளுமன்றத் தேர்தலில், ஊழலற்ற நல்லாட்சி தொடர்ந்திட, நமது நாடு வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேற, குடும்ப ஆட்சி ஒழிய, தமிழகம் முழுவதும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நமது பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் கரங்களை வலுப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.