அயோத்தி ராமர் கோயில் தொடர்பான விவாதம் மக்களவையில் நடைபெற்றது.
மக்களவையில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீராமர் கோயில் கட்டுமானம் மற்றும் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை குறித்த விவாதத்தைத் பாஜக உறுப்பினர் சத்ய பால் சிங் தொடங்கி வைத்து பேசினார். அப்போது இந்துக்களுக்கு மட்டும் அல்ல, ராமர் அனைவருக்கும் சொந்தமானவர் என தெரிவித்தார்.
ராமரின் இருப்பை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். ராமர்கோவில் கட்டப்பட்டது வகுப்புவாத பிரச்சினை அல்ல என்றும், இந்த விவாதத்தில் பங்கேற்று பேசுவது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்றும், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை பார்த்தது மற்றும் கடவுள் ராமரை தரிசனம் செய்தது வரலாற்று சிறப்பு மிக்க தருணம் என்றும் அவர் தெரிவித்தார்.
உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டது வரலாற்று சிறப்பு மிக்கது என்று சிங் கூறினார்.
முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் ராமர் கோயில் எங்களுக்கு நம்பிக்கையின் மையம் ஆக இருந்தது. எப்போதும் இருக்கும் என தெரிவித்தார். தேதியை அறிவித்து ராமர் கோயிலை கட்டினோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.