அயோத்தி ஸ்ரீ ராமர் கோயிலில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் சுவாமி தரிசனம் செய்தார் . இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமர் பிரதிஷ்டை விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெற்றது. பாரதப் பிரதமர் மோடி பூஜைகள் செய்து குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்து வைத்தார்.
கோவில் கும்பாபிஷேகம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மறுநாள் முதல் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் அயோத்தியை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கினர்.
அதேபோல் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என முக்கிய பிரமுகர்களும் அயோத்திக்கு வந்த வண்ணம் இருக்கின்றனர். இந்நிலையில் பாலிவுட் திரைத்துறையின் முக்கிய நடிகரான அமிதாப் பச்சன் அயோத்தி ஸ்ரீ ராமர் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார்.
வெள்ளை உடை அணிந்து, அதன் மீது காவி நிற கோட் அணிந்த அமிதாப் பச்சன், கோயில் தரிசனத்தை முடித்து விட்டு, பாதுகாவலர்களுக்கு மத்தியில் வெளியேறும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.