கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ரியாஸ் அபுபக்கர் (வயது 33). இவர் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் நேரடி தொடர்பில் இருந்ததாகப் புகார் எழுந்தது. அதன் பேரில், கடந்த 2018-ம் ஆண்டு என்.ஐ.ஏ-வால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இது தொடர்பாக, ரியாஸ் அபுபக்கரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளரான இலங்கையைச் சேர்ந்த ஜாஹரன் ஹாசீம் மற்றும் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை நிறுவனர் ஜாகீர் நாயக் ஆகியோரின் வீடியோக்களைப் பார்த்து ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், கேரளாவில் ஐ.எஸ் அமைப்பை பரப்பும் வகையில் இளைஞர்களைத் திரட்டி கொச்சியில் ரகசிய கூட்டம் நடத்தி உள்ளார். அப்போது, மனித வெடிகுண்டு தாக்குதல், தற்கொலை தாக்குதல் உள்ளிட்ட பயங்கரவாத செயல்களுக்கு திட்டமிட்டது தெரிய வந்தது.
இது தொடர்பான வழக்கு, கொச்சி என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவு பெற்ற நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது.
பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ் அமைப்பை பரப்பியது, மனித வெடிகுண்டு தாக்குதலுக்குத் திட்டமிட்டது உள்ளிட்ட காரணங்களுக்காக ரியாஸ் அபுபக்கருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.