பாலஸ்தீனத்தின் ரஃபா நகர் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், 28 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தினர்.
இதை அடுத்து, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரை இஸ்ரேல் தொடங்கியது. விமானப்படை, கப்பல்படை, தரைப்படை என முப்படைகளையும் ஏவிவிட்டு நடத்தி வரும் தாக்குதலில் காஸா நகரமே உருக்குலைந்து போய்க் கிடக்கிறது. இந்த போரில் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு சரியான பதிலடியை இஸ்ரேல் கொடுத்து வருகிறது. இந்த போரில் தற்போது வரை, 28 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர்.
இதனிடையே, எகிப்து எல்லையில் அமைந்துள்ள ரஃபா நகரத்தில் ஹமாஸ் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாகவும், அப்பகுதியில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவுறுத்தி இருந்தார்.
இந்நிலையில், ரஃபா நகரத்தின் மீது இஸ்ரேல் இராணுவ வீரர்கள் வான்வழி தாக்குதலை நடத்தினர். மூன்று வான்வழித் தாக்குதலில், 28 பேர் கொல்லப்பட்டனர்.