வரும் மக்களவை தேர்தலில், நாடு முழுவதும் சுமார் 96.88 கோடி மக்கள் வாக்களிக்க பதிவு செய்துள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அடுத்த சில மாதங்களில், மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டணி குறித்தும், பிரச்சார ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசித்து வருகின்றன. தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
வரும் மக்களவை தேர்தலில், 96 கோடியே 88 இலட்சத்து 21 ஆயிரத்து 926 பேர் வாக்களிக்க பதிவு செய்துள்ளனர். இதில், ஆண் வாக்காளர்கள் 49 கோடியே 72 இலட்சத்து 31 ஆயிரத்து 994 பேர் உள்ளனர். மேலும், 47 கோடியே 15 இலட்சத்து 41 ஆயிரத்து 888 பெண் வாக்காளர்கள் உள்ளனர்.
கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலை காட்டிலும், வரும் மக்களவை தேர்தலில் வாக்காளர்கள் எண்ணிக்கை 6 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம், உலகிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட நாடாக இந்தியா விளங்குவதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியலில், 18 முதல் 19 வயதுக்குட்பட்ட இளம் தலைமுறை வாக்காளர்கள் 1 கோடியே 84 இலட்சத்து 81 ஆயிரத்து 610 பேர் உள்ளனர். மேலும், 20 முதல் 29 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் 19 கோடியே 74 இலட்சத்து 37 ஆயிரத்து 160 பேர் உள்ளனர்.
80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 1 கோடியே 85 இலட்சத்து 92 ஆயிரத்து 918 பேர் உள்ளனர். 100 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 2 இலட்சத்து 38 ஆயிரத்து 791 பேர் உள்ளனர். கடந்த 2023-ஆம் ஆண்டு 940 ஆக பாலின விகிதம், இந்த ஆண்டு 948 ஆக அதிகரித்துள்ளது.
வாக்காளர் பட்டியல் சேர்ப்பு, வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் வெளிப்படுத்துதல் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றிற்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்துள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.