நடப்பு ஆண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத வகையில் உயர்கிறது.
மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் தலைமையில் மத்திய அறங்காவலர் குழுவின் 235-வது கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் நடப்பு ஆண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.25 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
ஆண்டுதோறும் தொழிலாளர் வருங்கால வைப்புநிதிக்கான வட்டி விகிதம் நிதி சூழலுக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்படுகிறது. 2020-21 நிதி ஆண்டில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 8.50 சதவீதமாக இருந்தது.
2021-22-ல் 8.10 சதவீதமாக குறைக்கப்பட்டது.1977-78 நிதி ஆண்டுக்குப் பிந்தைய காலத்தின் மிகக் குறைந்த வட்டி விகிதமாக அது இருந்தது. அதன்பிறகு, 2022-23-ல் பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 8.15 சதவீதமாக உயர்த்தப்பட்டது. தற்போது 8.25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த முடிவின் மூலம் சுமார் 6 கோடி தொழிலாளர்கள் பயன் அடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.