நாங்கள் பழிவாங்குவதை பற்றி சிந்திக்கவில்லை. தற்போது எங்களது முழு கவனமும் இறுதிப்போட்டி குறித்து தான் இருக்கிறது. கடந்த காலத்தை பற்றி சிந்திக்கவோ, திரும்பி பார்க்கவோ விரும்பவில்லை என இந்திய அணியின் கேப்டன் உதய் சாஹரன் கூறியுள்ளார்.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. கடந்த 19 ஆம் தேதி தொடங்கிய இந்த தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெறவுள்ளது.
மொத்தமாக 16 அணிகள் கலந்துகொண்ட இந்தப் போட்டியானது தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வந்தது. இந்தத் தொடரில் இறுதிப்போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன.
இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற சீனியர்களுக்கான ஒரு நாள் உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின.
அந்த போட்டியில் இந்தியா தான் வெற்றி பெறும் என்று அனைவரும் எண்ணினார். ஆனால் அதற்கு மாறாக அந்த அப்போட்டியில் ஆஸ்திரேலியா 6வது முறையாக கோப்பையை கைப்பற்றியது
அண்ணன்கள் விட்ட அந்த கோப்பையை தம்பிகள் கைப்பற்றி ஆஸ்திரேலியாவை பழிதீர்ப்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் நாங்கள் பழிவாங்குவதை பற்றி சிந்திக்கவில்லை என இந்திய அணியின் கேப்டன் உதய் சாஹரன் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ” நாங்கள் பழிவாங்குவதை பற்றி சிந்திக்கவில்லை. தற்போது எங்களது முழு கவனமும் இறுதிப்போட்டி குறித்து தான் இருக்கிறது. கடந்த காலத்தை பற்றி சிந்திக்கவோ, திரும்பி பார்க்கவோ விரும்பவில்லை.
கோடிக்கணக்கான மக்களின் கனவுகளை தோளில் சுமந்தபடி உலகக் கோப்பை இறுதிப்போட்டியை அணுகுகிறோம். இந்த இறுதிப்போட்டியின் மூலம் அடுத்த தலைமுறைக்கு உத்வேகம் அளிக்கும் வரலாற்றை உருவாக்குவதே எங்கள் நோக்கமாகும். இது வெறும் விளையாட்டு மட்டுமல்ல. வரலாற்றில் நமது பெயரை பொறிக்க ஒரு வாய்ப்பாகும்.
இந்த போட்டி தொடரில் முதல் ஆட்டத்தில் இருந்தே ஆர்வமுடனும், உறுதியுடனும் விளையாடி வருகிறோம். அத்துடன் உலகக் கோப்பையை நாட்டுக்கு கொண்டு செல்ல முடியும் என்ற நம்பிக்கையுடனும் உள்ளோம். அதேபோல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்திலும் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை கைப்பற்றி நாட்டுக்கு பெருமை சேர்க்க தயாராக இருக்கிறோம்” என்று கூறினார்.
மேலும் போட்டியை குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஹியூக் வெப்ஜென், ” இறுதிப்போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ள காத்திருக்க முடியவில்லை. இந்த போட்டி தொடரில் எங்களது ஒட்டுமொத்த அணியும் அற்புதமாக செயல்பட்டு இருக்கிறது.
ஒரு அணியாக கோப்பையை கையில் ஏந்துவது மிகவும் முக்கியமானதாகும். இந்த போட்டி தொடரில் இதுவரை இந்தியாவும் அபாரமாக செயல்பட்டுள்ளது. மேலும் இந்தியா ஒரு தரமான அணியாகும். அவர்கள் எங்களுக்கு சவால் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அந்த சவாலை நாங்கள் எதிர்நோக்கி இருக்கிறோம்” என்று கூறினார்.