தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததும், திருத்தணியில் அவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை திருத்தணி சட்டமன்றத் தொகுதியில் நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,
இந்தியா முழுவதும் இருந்து, திருத்தணி கோவிலுக்கு வரும் பக்தர்கள் அதிகம். தமிழுக்குப் பெருமை சேர்க்கும் ஊர் என்று அருணகிரி நாதர் பாடியுள்ளார். தணிகை புராணத்தை எழுதிய கச்சியப்ப முனிவர், பெரும் ஆளுமைகளான விசாகப் பெருமாள் ஐயர், தமிழ் உரையாசிரியர் சரவணப் பெருமாள் ஐயர் என தமிழுக்குப் பெருமை சேர்த்த ஆன்றோர்கள் வாழ்ந்த மண்.
மூன்றாயிரம் ஆண்டுகள் பழமையான ஈமப் பேழைகளையும், ஈமத் தாழிகளையும் திருத்தணியில் கண்டெடுத்தது, மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருத்தணியின் மக்கள் சிறப்புடன் வாழ்ந்து வந்துள்ளனர் என்பதைக் கூறுகிறது.
இந்தியாவின் முதல் துணைக் குடியரசுத் தலைவராகவும், இரண்டாவது குடியரசுத் தலைவராகவும் உயர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் பிறந்த மண். யார் யாரோ பெயரில், மக்களின் வரிப்பணத்தில் பெயர் வைப்பதும் கட்டிடம் கட்டுவதுமாக இருக்கும் தமிழக அரசியல் கட்சிகள், ஆசிரியர்களின் பெருமையை உயர்த்திய, இம்மண்ணில் பிறந்து நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற இத்தனை ஆண்டுகளாக முன்வரவில்லை.
தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததும், திருத்தணியில் அவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும். அந்தந்த மண்ணின் பெருமைக்குரிய மனிதர்களை அடையாளப்படுத்தாமல், எல்லா இடங்களிலும் திராவிடக் கட்சிகளின் தலைவர்களின் பெயரை வைப்பது வெட்கக் கேடு.
1956 ஆம் ஆண்டு, மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, திருத்தணி ஆந்திராவுடன் இருந்தது. 1960 ஆம் ஆண்டு வரை ஆந்திராவுடன் இருந்து திருத்தணியை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்று போராடிய சிலம்புச் செல்வர் ஐயா ம.பொ.சிவஞானம் அவர்கள் குடும்பம் இன்று, பாஜகவில் இருப்பது பெருமையளிக்கிறது. தேச நலனை, நாட்டின் நல்ல எதிர்காலத்தை, இளைஞர்கள், மாணவர்கள், மகளிர் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டை விரும்பும் நல்ல மனிதர்கள் அனைவரும் பாஜகவில் இணைந்து கொண்டிருப்பது, மகிழ்ச்சி தருவதாகும். வேண்டும் மீண்டும் மோடி என்ற வாக்கியம் மக்களின் மனதில் பதிந்துள்ளது.
கர்மவீரர் காமராஜர் அவர்களைப் பொய் சொல்லித் தோற்கடித்து, திமுக ஆட்சிக்கு வந்த 1967 ஆம் ஆண்டிலிருந்தே, உருவான நான்கு பிரச்சினைகள், இன்று வரை மக்களைப் பாதித்துக் கொண்டிருக்கின்றன. திமுகவின் லஞ்ச ஊழல், குடும்ப ஆட்சி, வீட்டினுள் இருந்து ஜாதியை வீதிக்குக் கொண்டு வந்து திமுக செய்யும் ஜாதி அரசியல், அரசியல் அடாவடித்தனப் போக்கு இவை நான்கும் கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழக மக்களை வஞ்சித்துக் கொண்டிருக்கின்றன.
இவை நான்கையும் அரசியலில் இருந்து அகற்ற வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. அது நமது கடமை. அதற்கான நேரம் இது. இவற்றை அகற்ற, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்க வேண்டும்.
முதல் முறை பொறுப்பேற்ற ஐந்து ஆண்டுகளில் நமது பிரதமர், லஞ்சத்திற்கெதிரான ஆட்சி செய்து, ஊழலை அடியோடு கட்டுப்படுத்தினார். இரண்டாவது முறை பொறுப்பேற்ற ஐந்து ஆண்டுகளில், உலக அளவில் வளர்ச்சிப் பாதையில் பயணம் செய்யும் நாடாக நமது நாட்டை மேம்படுத்தியுள்ளார்.
அடுத்து வரும் ஐந்து ஆண்டுகள், நமது அடுத்த தலைமுறைக்கான ஆட்சி. காங்கிரஸ் திமுக கூட்டணி 2004 – 2014 பத்து ஆண்டுகள் ஆட்சி செய்தபோது, 2G அலைக்கற்றை, நிலக்கரி சுரங்கம், உரம் என அனைத்து துறைகளிலும் ரூ.12 லட்சம் கோடி ஊழல் செய்து, நமது நாடு உலக அரங்கில் ஊழல் நாடு என்ற பெயரைப் பெற்றிருந்தது.
வளர்ச்சி, கலாச்சாரப் பாதுகாப்பு என ஊழலற்ற நல்லாட்சியால் நமது நாடு இன்று உலக அரங்கில் தலை நிமிர்ந்திருக்கிறது. 110 கோடி மக்களுக்கு, நமது நாட்டிலேயே உருவாக்கிய கொரோனா தடுப்பு ஊசிகள் இரண்டு முறை, அதாவது 220 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு நமது நாட்டு மக்களை கொரோனாவில் இருந்து மீட்க முடிந்தது. ஒரு ரூபாய் கூட ஊழல் இல்லாத, மக்கள் நலன் ஒன்றையே நோக்கமாகக் கொண்டிருந்ததால் மட்டுமே இது சாத்தியம்.
பத்து ஆண்டுகளில் ரூ.12 லட்சம் கோடி ஊழல் செய்த காங்கிரஸ் ஆட்சியில் இது போன்ற நோய்ப் பரவல் ஏற்பட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்?
நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த பத்து ஆண்டு கால நல்லாட்சியில், இந்தியா முழுவதும் நான்கு கோடி மக்களுக்கு, பிரதமரின் வீடு திட்டத்தில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.
50.10 கோடி மக்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இன்று நாம் அதிக அளவில் பயன்படுத்தும் டிஜிட்டல் முறையிலான பணப் பரிவர்த்தனைக்கு அடிப்படையே இந்த வங்கிக் கணக்குகள்தான்.
11 கோடி கழிப்பறைகள், தமிழகத்தில் 46 லட்சம் விவசாயிகளுக்கு விவசாய கௌரவ நிதி வருடம் ரூ. 6,000 என இதுவரை, 15 தவணைகளாக 30,000 ரூபாய் வழங்கியது என ஏழை, எளிய மக்களை, விவசாயிகளை, இளைஞர்களை, மகளிரை மையப்படுத்தி நமது ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்தியாவிலேயே மிகப் பெரிய பணக்கார பாராளுமன்ற உறுப்பினரை அரக்கோணம் பெற்றிருக்கிறது. ஆனால், அவரால் திமுகவுக்கு மட்டும்தான் பயனே தவிர, அரக்கோணம் தொகுதிக்கு எந்தப் பயனும் இல்லை.
கடந்த ஐந்து ஆண்டுகளில் தொகுதிக்கு எந்தத் திட்டங்களையோ, மக்கள் பணிகளையோ அவர் கொண்டு வந்ததில்லை. மாறாக, 1,250 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தார் என்ற அவப்பெயர்தான் தொகுதிக்கு வந்திருக்கிறது. அவரது வீட்டில் நடந்த வருமான வரிச் சோதனையில், 1,250 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்திருப்பதாக, கண்டறிந்திருக்கிறார்கள்.
எட்டு லட்சம் கோடி ரூபாய் கடனில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது தமிழக அரசு. திமுக ஆட்சிக்கு வந்து 32 மாதங்களில், இரண்டு லட்சத்து அறுபத்தி ஒன்பதாயிரம் கோடி புதிய கடன் வாங்கியுள்ளது. தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும், மூன்று லட்சத்து இருபதாயிரம் ரூபாய் கடன் சுமை இருக்கிறது. திமுகவினர் கொள்ளையடிக்க, மக்களின் தலையில் கடன் சுமையைத் திணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
திருத்தணியில் ஒரு கிராமத்தில், 28 லட்ச ரூபாய் செலவில் அரசுத் துவக்கப் பள்ளி ஒன்றிற்குக் கட்டிடம் கட்டினார்கள். கட்டிடத்தைத் திறந்து முதல் நாள் பள்ளிக்கு மாணவர்களும் ஆசிரியர்களும் வந்தபோது, தரை பெயர்ந்து வந்திருக்கிறது. அறுபது ஆண்டுகளுக்கு முன்பு பெருந்தலைவர் காமராஜர் கட்டிய பாலங்கள் இன்னும் சிறு கீறல் கூட இல்லாமல் பயன்பாட்டில் இருக்கின்றன. ஆனால் ஊழல் திமுக கட்டும் கட்டிடங்கள் ஒரு மாதம் கூடத் தாங்குவதில்லை. இதுதான் திராவிட மாடல் அரசு.
திராவிடக் கட்சிகள், சாலைகள் அமைப்பதில் கூட பெருமளவு ஊழல் செய்து கொண்டிருக்கின்றன. அறமற்ற அறநிலையத் துறையிலும் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது திமுக. திருத்தணியும் அதற்கு விலக்கல்ல. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்போது, அறநிலையத் துறை நீக்கப்பட்டு, கோவில்கள் அந்தந்த ஊர் மக்களாலேயே நிர்வகிக்கும்படி செய்வோம்.
வரும் பாராளுமன்றத் தேர்தலில், குடும்ப அரசியல் செய்யும் ஊழல் கட்சிகள் முழுமையாகப் புறக்கணிக்கப்பட வேண்டும். நமது நாட்டின் வளர்ச்சி அடுத்த கட்டத்திற்குச் செல்ல, ஏழை மக்கள் அனைவரும் முன்னேற, ஊழலற்ற, லஞ்சமில்லாத ஆட்சி தொடர, மக்கள் நலத் திட்டங்கள் பெருக, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் கரங்களை வலுப்படுத்துவோம். தமிழகம் முழுவதும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்போம் எனத் தெரிவித்தார்.