மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வரும் 13-ஆம் தேதி திறக்கப்படுகிறது.
உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில், ஆண்டுதோறும் மண்டல பூஜை, மகர விளக்குப் பூஜை, வருடப் பிறப்பு போன்றவற்றிற்குத் திறக்கப்படுவது வழக்கம். மேலும், ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பின் போதும் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் வழக்கமான பூஜைகள் நடைபெறும்.
அந்த வகையில், மாசி மாத பூஜைக்காக வரும் 13-ஆம் தேதி மாலை, ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. தந்திரி பிரம்மஸ்ரீ கண்டரரு மகேஷ் மோகனரு திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து, 18-ஆம் தேதி வரை 5 நாட்கள் நெய் அபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, சகஸ்ரகலச பூஜை, புஷ்பாபிஷேகம் உட்பட சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும்.
இதைத்தொடர்ந்து, 18-ஆம் தேதி இரவு 10 மணியளவில் ஐயப்பன் கோவிலின் நடை அடைக்கப்படும். ஆன்லைன் முன்பதிவு, உடனடி முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
மாசி மாத பூஜையை முன்னிட்டு, ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக, பத்தனம்திட்டா, கோட்டயம், செங்கன்னூர், திருவனந்தபுரம், கொட்டாரக்கரை, எர்ணாகுளம், பாலக்காடு உட்பட முக்கிய பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.