அமைதியை சீர்குலைக்க முயலும் யாரையும் விட்டுவைக்க மாட்டோம் என உத்தரகாண்ட் முதல்வர் தாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட மதரஸாவை இடிக்க சென்ற போது வன்முறை கும்பல் ஒன்று அதிகாரிகள் மற்றும் போலீசார் மீது தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து அங்கு பெரும் வன்முறை மூண்டது. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். 300க்கும் மேற்பட்ட போலீசார் காயம் அடைந்தனர்.
இந்நிலையில் ஹரித்வாரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உத்தரகாண்ட் முதலமைச்சர் தாமி பங்கேற்று பேசினார். எங்கள் காவலர்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் தங்கள் கடமையைச் செய்ததற்காக ஒரு கட்டுக்கடங்காத கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளனர்.
அதே மாலிக் கா பகீச்சாவில் காவல்நிலையம் கட்டுவோம். கலவரக்காரர்கள் மற்றும் சமூக விரோதிகளுக்கு தெளிவான செய்தி. தேவபூமி உத்தரகாண்டில் அமைதியை சீர்குலைக்க முயலும் யாரையும் விட்டுவைக்க மாட்டோம் என தெரிவித்துள்ளார்.
இதனிடையே கலவரம் தொடர்பாக 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். முக்கிய நபரான அப்துல் மாலிக்கை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.