சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான அயலான் திரைப்படம் தற்போது ஓடிடி-யில் வெளியாகியுள்ளது.
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படம் நீண்ட நாட்களுக்கு பிறகு ஜனவரி 12ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. இப்படம் அறிவியல் சாகசங்கள் நிறைந்த ஆக்ஷன் என்டர்டெயினராக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, ஷரத் கேல்கர் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கிரகத்தைக் காப்பாற்றும் நோக்கத்துடன் பூமிக்கு வரும் வேற்றுகிரகவாசியைச் சுற்றி இப்படம் நகர்கிறது. இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
சிவகார்த்திகேயன் நடித்து வெளியான படங்களிலேயே அதிகப்படியான நாடுகள் மற்றும் திரைகளில் வெளியான திரைப்படம் ‘அயலான்’ தான் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
இந்நிலையில், இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ‘அயலான்’ திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது.