ஏமனில் அகதிகள் முகாம்களுக்கு வெளியே, கண்ணிவெடி ஒன்று வெடித்ததில், விளையாடி கொண்டிருந்த 3 குழந்தைகள் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும், நான்கு பேர் படுகாயமடைந்தனர்.
தென்மேற்கு ஆசியாவில் ஏமன் நாடு அமைந்துள்ளது. சுமார் 2.2 கோடி மக்கள் தொகை கொண்ட ஏமனில் உள்நாட்டு போரால், குழப்பமான சூழல் நிலவுகிறது. கடந்த 2015-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஏமன் அதிபர் மன்சூர் ஹைதி தலைமையிலான அரசுக்கும், ஹவுதி தீவிரவாதப் படைக்கும் இடையே, உள்நாட்டு போர் ஏற்பட்டது. இதனால், மன்சூர் ஹைதி தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார்.
தொடர்ந்து, ஏமன் அதிபராக அலி அப்துல்லா சாலே பதவி ஏற்றார். எனினும், அங்கு உள்நாட்டு போர் முடிவுக்கு வரவில்லை. இதனைத் தொடர்ந்து, ஏமன் அரசுக்கு ஆதரவாக, சவுதி அரேபியா அரசு செயல்பட்டு வருகிறது. ஹவுதி தீவிரவாதிகளுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. ஏமன் நாட்டின் பல்வேறு பகுதிகளில், ஹவுதி தீவிரவாதிகள் கண்ணிவெடிகளை புதைத்து வைத்துள்ளனர்.
இதனால், அங்கு தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது. ஏமனில் உள்ள மக்கள் ஆங்காங்கே புலம் பெயர்ந்து செல்கின்றனர். மேலும், உள்நாட்டிலேயே அகதிகளாக உள்ளனர். ஏமன் நாட்டின் தெற்கே லாஜ் மாகாணத்தில் புலம்பெயர்ந்த அகதி முகாம்கள் செயல்பட்டு வருகிறது. இதில், போரால் பாதிக்கப்பட்டு தப்பி வந்த நூற்றுக்கணக்கானோர் தங்கள் குடும்பத்துடன் தங்கி உள்ளனர்.
இந்நிலையில், முகாம்களுக்கு வெளியே குழந்தைகள் விளையாடி கொண்டிருந்தபோது, திடீரென கண்ணிவெடி ஒன்று வெடித்து சிதறியது. இதில், 3 குழந்தைகள் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும், 4 பேர் காயமடைந்தனர்.
முகாம்களுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்த குழந்தைகள், மண்ணில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியை தெரியாமல் மிதித்ததால், வெடித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, கடந்த 3-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை, ஏமனில் 784 கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.