பாகிஸ்தான் பொதுத்தேர்தலில், எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், புதிய அரசு அமைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், இம்ரான்கான் கட்சியைத் தவிர்த்து மற்ற கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து முன்னாள் பிரதமர் நவாஸ்ஷெரீப் ஆலோசித்து வருகிறார்.
பாகிஸ்தானில் கடந்த 8-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. அரசியல், பொருளாதார நெருக்கடி, தீவிரவாதம், வன்முறை என பல சவால்களை சந்தித்து வரும் பாகிஸ்தானுக்கு இந்த பொதுத்தேர்தல் மிக முக்கியமானது.
நாடாளுமன்றத் தேர்தலுடன் 4 மாகாணங்களுக்கான தேர்தலும் நடந்தது. பல்வேறு வன்முறைகளுக்கும், தீவிரவாத தாக்குதல்களுக்கும் மத்தியில் பாகிஸ்தான் தேர்தல் நடந்து முடிந்தது.
கடந்த சில நாட்களுக்கு தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்து, மொத்தமுள்ள 265 தொகுதியில், 264 தொகுதிகளுக்கு மட்டும் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், எந்த ஒரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத சூழல் நிலவுகிறது.
சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீப்-இ-இன்சாப் கட்சியின் சின்னம் முடக்கப்பட்டுள்ளது. இதனால், அக்கட்சியின் நிர்வாகிகள், சுயேட்சையாக போட்டியிட்டனர். நாடாளுமன்றத் தேர்தலில், அவர்கள் 101 இடங்களில் வெற்றி பெற்றனர்.
முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி 75 இடங்களில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களிலும், முட்டாஹிதா குவாமி இயக்கம் பாகிஸ்தான் என்கிற கட்சி 17 இடங்களையும் கைப்பற்றியது. மேலும், மற்ற சிறிய கட்சிகள் 17 இடங்களை பிடித்துள்ளன.
பாகிஸ்தானில் ஆட்சி அமைப்பதற்கு 133 எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், புதிய அரசு அமைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே, இம்ரான்கான் கட்சியைத் தவிர்த்து, மற்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைப்பது குறித்து முன்னாள் பிரதமர் நவாஸ்ஷெரீப் ஆலோசித்து வருகிறார். இதனால், மற்ற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.