டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் எஸ்பிஐ ஸ்மார்ட் பேமென்ட் கார்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் டெல்லியில் அனைத்து எய்ம்ஸ் சென்டர்களிலும் பண பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும்
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் மற்றும் ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா நேற்று எய்ம்ஸ் எஸ்பிஐ ஸ்மார்ட் பேமென்ட் கார்டை அறிமுகப்படுத்தினார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், எய்ம்ஸ் ஸ்மார்ட் பேமென்ட் கார்டு தொலைதூரப் பகுதிகளில் இருந்து மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளின் நீண்டகால பிரச்சினையை தீர்க்கும் என்று குறிப்பிட்டார். நோயாளிகள் அல்லது அவர்களது பராமரிப்பாளர்கள், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் முழுவதும் உள்ள வசதி மையங்களில் இருந்து கார்டை எளிதாகப் பெறலாம் என்றும், அதன்பிறகு பல்வேறு கவுன்டர்களில் பணம் செலுத்த அதைப் பயன்படுத்தலாம் என்றும் அவர் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நோயாளி பராமரிப்பு சேவைகள் மற்றும் டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியின் முக்கிய பங்காக இந்த துவக்கத்தை பாராட்டிய டாக்டர் மாண்டவியா, டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியானது எளிதான மற்றும் பாதுகாப்பின் புதிய சகாப்தத்தை அறிமுகப்படுத்தியுள்ளது என்றும் கூறினார்.
ஸ்மார்ட் பேமென்ட் கார்டை ‘ஒரு எய்ம்ஸ், ஒரு கார்டு’ என்று குறிப்பிட்ட மத்திய அமைச்சர், எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிக்கு, அவசரமாக பணம் செலுத்துதல் தொடர்பான தேவை ஏற்பட்டால், நாடு முழுவதும் இருந்து எவரும் எளிதாகவும் விரைவாகவும் பணப் பரிமாற்றம் செய்யலாம் என்றும் அவர் கூறினார். எதிர்காலத்தில் இந்த அட்டைகளின் சேவை நாட்டில் உள்ள அனைத்து எய்ம்ஸ் மருத்துவமனைகளிலும் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
SBI-AIIMS ஸ்மார்ட் கார்டு அனைத்து நோயாளிகளுக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு எந்த சேவைக் கட்டணமும் இல்லை. அனுமதிக்கப்பட்டவுடன் அனைத்து நோயாளிகளுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். நோயாளியின் தனிப்பட்ட மருத்துவமனை அடையாள எண் மற்றும் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷனின் (ABDM) கீழ் வழங்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் அக்கவுண்ட் (ABHA) ஐடி ஆகியவற்றுடன் கார்டு இணைக்கப்படும்.
நோயாளியின் UHID உடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட ஒரு முறை கடவுச்சொல்லை (OTP) வழங்கினால் மட்டுமே கார்டில் இருந்து டாப்-அப் மற்றும் பணத்தைத் திரும்பப் பெற முடியும். இது மோசடி மற்றும் திருட்டை தடுக்க உதவும்.
ஒரு நோயாளி அட்டையை இழந்தால், நோயாளிக்கு மாற்று அட்டை இலவசமாக வழங்கப்படும்.ஒரு முறை வழங்கப்பட்ட அட்டை ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். இந்தக் கார்டைப் பயன்படுத்தி செய்யப்படும் அனைத்துப் பரிவர்த்தனைகளும் AIIMSல் உள்ள E-Hospital செயல்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.