அஞ்சல் துறை சார்பில், ஓய்வூதியர்களுக்கான குறைதீர்ப்பு முகாம், வரும் ஏப்ரல் மாதம் 25-ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது.
இதில், அஞ்சல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் ஓய்வூதிய பலன்கள் பெறுவதில் தாமதம், குறைகள், ரயில்வே துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்று அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்களின் குறைகள் குறித்து பரிசீலிக்கப்படும்.
குறைதீர்க்கும் முகாம் சம்பந்தமாக கோட்ட அளவில் ஏற்கனவே மனு அளித்து, அதற்கு கோட்ட கண்காணிப்பாளர் அளித்த பதிலில் திருப்தியடையாதவர்கள் மட்டும், தங்கள் குறைகளை அனுப்பி வைக்க வேண்டும். நேரடியாக இம்முகாமிற்கு அனுப்பப்படும் புதிய புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது.
ஓய்வூதியர்கள் தங்களது குறைகளை இம்மாதம் 29-ஆம் தேதிக்குள் திருமதி பொற்கொடி கணக்கு அதிகாரி, அஞ்சல் துறைத்தலைவர் அலுவலகம், தென்மண்டலம், மதுரை – 625002 என்ற முகவரிக்கோ அல்லது accts.madurai@indiapost.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பி வைக்கவேண்டும்.
குறைகளை சாதாரண தபால், பதிவு தபால் அல்லது விரைவு தபால் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும். தனியார் கூரியர் சேவை மூலம் அனுப்பப்படும் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
மதுரையில் தென்மண்டல (தமிழ்நாடு) அஞ்சல் துறை தலைவர் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு அரங்கத்தில் வரும் ஏப்ரல் மாதம் 25-ஆம் தேதி அன்று குறைதீர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.