கோவாவில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலுக்கு சுமார் 2,000 பயணிகளுடன் “ஆஸ்தா” சிறப்பு இரயில் கொடியசைத்து தொடங்கிவைக்கப்பட்டது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் மூலவர் பால ராமர் சிலை பிரதிஷ்டை ஜனவரி22-ம் தேதி நடைபெற்றது. இந்த கோலாகல நிகழ்ச்சியில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்றனர்.
பால ராமரை தரிசிக்க அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் அயோத்தியில் குவிந்து வருகின்றனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அயோத்திக்கு பக்தர்களை அழைத்துச் செல்ல இந்திய ரயில்வே “ஆஸ்தா சிறப்பு” ரயில்களை அறிவித்துள்ளது. மேலும் பல்வேறு மாநிலத்திலிருந்து இந்த சிறப்பு ரயில் இயக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில் கோவாவில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலுக்கு சுமார் 2,000 பயணிகளுடன் “ஆஸ்தா” சிறப்பு இரயிலை முதல்வர் பிரமோத் சாவந்த் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், மாநில பாஜக தலைவர் சதானந்த் ஷெட் தனவாடே மற்றும் எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.
கோவாவில் இருந்து ரயிலில் பயணம் செய்தவர்கள் உட்பட அனைவரும் ராமருக்கு பிரார்த்தனை செய்யும் போது, பிப்ரவரி 15 ஆம் தேதி அனைத்து மாநில அமைச்சரவை அமைச்சர்களுடன் அயோத்திக்கு வருவேன் என்று முதல்வர் பிரமோத் சாவந்த் கூறினார்.
இந்தக் கனவை நனவாக்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கு கோவா மக்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறார்கள் என்றார்.
உத்தரப் பிரதேசத்தில் ராமர் கோவில் திறக்கப்பட்டதில் இருந்து பக்தர்கள் அயோத்திக்கு செல்வதில் உற்சாகமாக உள்ளனர்.