பிலிப்பைன்ஸ் நாட்டில் கனமழையின் காரணமாக, ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது. மேலும், மண்ணுக்குள் புதைந்த 50-க்கும் மேற்பட்டவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் டாவோ டி ஓரோ (Davao de Oro) மாகாணத்தில் மசாரா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள தங்கச் சுரங்கத்தில் தொழிலாளர்கள் பலர் பணியாற்றி வருகின்றனர்.
இப்பகுதியில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து, பெய்து வரும் கனமழையின் காரணமாக, அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. தொழிலாளர்கள் பணியை முடித்து விட்டு வீடு திரும்ப பேருந்துக்காக காத்திருந்தபோது இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும், பொதுமக்களும் சிக்கி கொண்டனர்.
இதுகுறித்து அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்புக் குழுவினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த மீட்புக் குழுவினர் நிலச்சரிவில் சிக்கிய 32 பேரை மீட்டனர். இவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 51 பேர் மண்ணுக்குள் புதைந்துள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அப்பகுதியில் பெரிய இயந்திரங்களைக் கொண்டு மண்ணை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆவதால், மண்ணுக்குள் புதைந்தவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
அப்பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில், மோசமான வானிலை நிலவுவதோடு, மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது.