சென்னையில் இருந்து மும்பை புறப்பட்ட இண்டிகோ விமானத்திற்கு செவ்வாய்க்கிழமை காலை வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து, 6E-5188 என்ற எண் கொண்ட இண்டிகோ நிறுவனத்தை சேர்ந்த விமானம் இன்று காலை மும்பை புறப்பட்டு சென்றது. இந்த விமானம் மும்பையை அடைவதற்கு 40 கிலோமீட்டர் தூரம் இருந்த நிலையில், வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
இதுகுறித்து விமானத்தில் இருந்த பைலட்டுகள் தரை கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் பாதுகாப்பு முகமை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, வெடிகுண்டு சோதனை செய்ய அனைத்து நெறிமுறைகளும் பின்பற்றப்பட்டன. விமான நிலைய பாதுகாப்பு முகமை அதிகாரிகளின் வழிகாட்டுதல்களின்படி, விமானம் இயக்கப்பட்டது. சரியாக காலை 8.47 மணிக்கு மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் தரையிறங்கியது.
தயார் நிலையில் இருந்த வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் வெடிகுண்டு செயலிழக்க செய்யும் வீரர்கள், உடனே விமானத்தை சோதனை செய்தனர். ஆனால், அந்த விமானத்தில் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.