தி.மு.க. எம்.பி. ஆ.இராசாவின் அநாகரிகமான பேச்சை தி.மு.க தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் வேடிக்கை பார்ப்பதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டித்துள்ளது.
இது தொடர்பாக, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீலகிரி பாராளுமன்ற உறுப்பினரும், தி.மு.க-வின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஆ.இராசா சமீபத்தில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சியின் புகழுக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். தமிழக முதல்வரும், தி.மு.க-வின் தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு இது தெரியுமா? என்பதே சந்தேகமாக இருக்கிறது.
சென்ற வருடம் முதல்வர் ஸ்டாலின் தனது கட்சியினரிடம் பேசும்போது, நமது கட்சியின் தலைவர்கள் என்ன பேசுவார்களோ எனக் காலையில் கண் விழிக்கும்போதே பதட்டமாக இருக்கிறது. இதனால் தனக்கு இரவில் தூக்கம் கூட வருவதில்லை எனப் புலம்பியதை நாடே அறியும். இதன் காரணமாகத் தி.மு.க-வினர் அநாகரிகமாகத் தேச தலைவர்கள் குறித்துப் பேசுவது அவரது காதுக்குச் செல்லாமல் மறைக்கப்படுகிறதோ என்று மக்கள் பேசுகின்றனர்.
சமீபகாலமாக தி.மு.க. பிரமுகர்கள் பேச்சு எல்லை மீறுகிறது. ஆதிக்கப் போக்குடன் இந்து சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் எகத்தாளமாக வாய்க்கு வந்த படி பேசுகின்றனர்.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. சுதேசி இயக்கத்தின் முன்னோடி. ஏழை தொழிலாளர்கள் உரிமைக்காகப் போராடிய போது ஆங்கிலயே கிறித்துவ அடக்குமுறை ஆட்சியில் பாதிக்கப்பட்டபோது தனது சொத்துக்களை விற்று பசியாற்றிய வள்ளல் அவர்.
சுதந்திர போரில் ஈடுபட்டு, சுதேசிக் கப்பல் கம்பெனி நடத்தி, அனைத்தையும் நாட்டுக்காக அர்பணித்து இறுதியில் ஏழ்மையில் வாடினார் என்றாலும், தனது இறுதிக்காலம் வரையில் இதற்காக அவர் எந்த வருத்தமும் படவில்லை, யாரிடமும் கையேந்தவில்லை.
இந்த நிலையில், வ.உ.சியின் நேர்மைக்கும், எளிமைக்கும், தியாகத்திற்கும் களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் “ஈவேராவிடம் தன் மகனின் வேலைக்காக வ.உ.சி. கெஞ்சினார்” என்று கட்டுக்கதை கட்டி ஆ.இராசா பேசியது தேச பக்தர்கள் மனதில் ஆறாத வடுவை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை பிராமணச் சமூகத்தை, பட்டியலின சமூகத்தைக் கேவலப்படுத்தி வந்த தி.மு.க-வினர் சமீபகாலமாக அனைத்து இந்து சமூகத்தின் அனைத்து பிரிவினரையும், இந்துக்களின் நம்பிக்கைகளையும் தொடர்ந்து இழிவுபடுத்தி வருகிறார்கள்.
எனவே, ஆ.இராசா மீது முதல்வர் ஸ்டாலின் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், இனி வரும் காலங்களில் இதுபோன்ற இழிவான கருத்துக்களைத் தி.மு.க-வினர் பேசுவதைத் தடை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.