இஸ்லாமிய கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்ததற்கு, இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
குற்ற வழக்கில் தண்டனை பெற்று, 25 வருடங்களுக்கு மேலாக சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என இஸ்லாமிய அமைப்புகள் தி.மு.க அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தன.
கடந்த 1998-ம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 46 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த வழக்கில், தொடர்புடைய அபுதாஹீர், ஹாரூன் பாஷா, ஷாகுல் அமீது, குண்டு ஷாகீர், ஊமை பாபு ஆகியோர் தண்டனை பெற்று சிறையில் கடந்த 24 வருடத்திற்கு மேலாக உள்ளனர்.
இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 3-ம் தேதி முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளையொட்டி, இஸ்லாமிய கைதிகள் அபுதாஹீர், ஹாரூன் பாஷா, ஷாகுல் அமீது, குண்டு ஷாகீர், ஊமை பாபு ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். இதற்கான உத்தரவை தமிழ அரசு பிறப்பித்துள்ளது.
கோவை குண்டு வெடிப்பு விவகாரத்தில் அப்பாவி பொது மக்கள் கொலை செய்யப்பட காரணமாக இருந்த இஸ்லாமிய கைதிகளை, வாக்கு வங்கிக்காக தி.மு.க அரசு விடுதலை செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தி.மு.க-வின் இந்த செயலுக்கு பா.ஜ.க மற்றும் இந்து அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. முதல்வர் ஸ்டாலினுக்கும், தி.மு.க-வுக்கும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, சிறையில் உள்ள முஸ்லிம் கைதிகளின் விடுதலையை வன்மையாகக் கண்டிக்கிறேன். பயங்கரவாதத்திற்கு நிறமில்லை. தீவிரவாதத்தை ஒரு சமூகம், ஜாதி அல்லது மதத்திற்குள் மட்டும் நிறுத்திவிடவேண்டாம். கோவை குண்டு வெடிப்பை ஒரு தீவிரவாதச் செயலாகவே பார்க்கிறேன். அவர்களை விடுதலை செய்வது ஆபத்து.
தீவிரவாதிகள் யாராக இருந்தாலும் பயங்கரவாதிகள்தான். தீவிரவாதம் அங்கே இருந்து போகவில்லை, இன்னும் இருக்கிறது.
அனைத்து முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்ல. அவர்கள் பயங்கரவாதிகள் என்பதால் அவர்களை வெளியே விடக்கூடாது என்கிறேன் என எழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளார் அண்ணாமலை.
மேலும், கோவை குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரோ, இந்த விவகாரத்தை, நாங்கள் “மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம்” என சபதம் எடுத்துள்ளனர்.
கோவை குண்டு வெடிப்பு கைதிகள் விடுதலை விவகாரம் வரும் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும் என்பதில் ஐயமில்லை.