சமூகம் மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையில் இந்தியா, ஐக்கிய அரபு அமீரக நாடுகள் உலகிற்கு முன்னுதாரணமாக திகழ்வதாக பாரத பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளார். அங்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் அம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் சிறப்பு வரவேற்றார் அளித்தார்.
பிரதமர் மோடி வருகையையொட்டி, சையீத் விளையாட்டு மைதானத்தில், ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் கலந்துக் கொள்ளும் ‘அஹ்லான் மோடி’ (வணக்கம் மோடி) என்ற தலைப்பில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பாரத பிரதமர் மோடியைக் காண ஏராளமான இந்திய வம்சாவளியினர் இந்த மைதானத்திற்கு வந்தனர்.
மைதானத்திற்குள் பிரதமர் மோடி நுழைந்த போது, இந்திய வம்சாவளியினர் மோடி, மோடி என உற்சாகமாக கோஷம் எழுப்பினர். தொடர்ந்து இந்திய வம்சாவளியினர் இடையே பிரதமர் மோடி உரையாற்றினார்.
பிரதமர் நரேந்திர கூறியதாவது, இந்தியா ஐக்கிய அரபு அமீரகத்தின் உறவு திறமை, புதுமை மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையிலானது. எங்கள் உறவுகளை மீண்டும் வலுப்படுத்தியுள்ளோம்.
தற்போது, ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவின் மூன்றாவது பெரிய வர்த்தக கூட்டாளியாக உள்ளது. இன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஏழாவது பெரிய முதலீட்டாளராக உள்ளது. இன்றும் கூட, எங்களிடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்த உறுதிப்பாட்டை முன்னெடுத்துச் செல்கின்றன.
தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புத் துறையில், இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் நட்பு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. இரு நாடுகளும் சமூகம் மற்றும் கலாச்சாரத்தில் உலகிற்கு முன்னுதாரணமாக உள்ளன.
இரு நாட்டு உறவும் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது. இது மேலும், வலுப்பெற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.
தற்போது இந்தியா சிறப்பான சுற்றுலா தலமாக அங்கீகரிக்கப்பட்டு வருகிறது. இந்தியா ஒரு பெரிய விளையாட்டு சக்தியாக உருவாகி உள்ளது. இந்தியாவில் டிஜிட்டல் புரட்சியை நீங்கள் அறிவீர்கள். டிஜிட்டல் இந்தியா உலகம் முழுவதும் பாராட்டப்படுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ளவர்களும் அதன் பலனைப் பெறுவதை உறுதிசெய்ய, நாங்கள் முயற்சிகள் செய்து வருகிறோம்.
இங்கு விரைவில் UPI சேவை தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியர்களுக்கிடையே, பணம் செலுத்த முடியும்.
உலகின் அனைத்து முக்கிய துறைகளிலும், இந்தியாவின் பங்கு உள்ளது. எங்கு நெருக்கடி ஏற்பட்டாலும், முதலில் அங்கு சென்றடையும் நாடாக இந்திய உள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு தனக்கு வழங்கப்பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய சிவிலியன் விருதான ‘தி ஆர்டர் ஆஃப் சயீத்’ விருதுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். மேலும், இந்த கௌரவம் தனக்கு மட்டுமல்ல, வளைகுடா நாட்டில் வசிக்கும் கோடிக்கணக்கான இந்தியர்கள் மற்றும் புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கும் என்று கூறினார்.