அசாமின் மஜூலி – ஜோர்காட்டை இடையே, ரூ.382.10 கோடியில், நடைபாதைகளுடன் கூடிய, புதிய இரண்டு வழி நெடுஞ்சாலையை அமைக்கும் திட்டத்திற்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த திட்டத்தில், ஒரு மேம்பாலம், சர்வீஸ் சாலைகள் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலையின் மொத்த நீளம் 20.5 கிலோமீட்டர்கள் ஆகும்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது, ஜோர்காட் – மஜூலி இடையே நேரடி சாலை இணைப்பை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தற்போது வரை இதுபோன்ற நேரடி சாலை இணைப்பு இல்லை. இந்த பிரச்னை நேரடி இணைப்பு ஏற்படுத்துவதன் மூலம் தீர்ந்துவிடும்.
தற்போது, பிரம்மபுத்திரா நதியை கடக்க அப்பகுதியில் உள்ளவர்கள் படகை நம்பி உள்ளனர். வெள்ளத்தின் போது நதியை கடக்கும் மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. இணைப்புச் சாலைகள் மற்றும் மஜூலி பாலத்தின் கட்டுமானம் தொடர்ச்சியான இணைப்பை உறுதி செய்யும். இது உள்ளூர் மக்களின் பொருளாதார நிலையையும், சுற்றுலாவையும் மேம்படுத்தும். இந்த திட்டம் பயண நேரத்தைக் குறைக்கும் என்று கூறினார்.