அபுதாபியில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட இந்து கோயிலை பாரத பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். அதற்காக அவர் நேற்று ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றார்.
அபுதாபி இந்து கோவில் வளாகம் 27 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கோவில் கட்டிடம் மட்டும் மொத்தம் 55 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ளது.
மொத்தம் ரூ.700 கோடி மதிப்பில் உருவானது. இதில் மிகப்பெரிய கலையரங்கம், கண்காட்சி அரங்கம், நூலகம், உணவகங்கள், கூட்டங்கள் நடத்தும் பகுதி மற்றும் 5 ஆயிரம் பேர் நிகழ்ச்சிகளை ஒரே நேரத்தில் பார்வையிடும் வசதியுடன் 2 சமூக அரங்குகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக வளாகத்தின் அருகே 53 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கார் நிறுத்தப்பகுதி அமைக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 1,200 கார்கள் மற்றும் 30 பஸ்கள் ஒரே நேரத்தில் நிறுத்திக்கொள்ளலாம். கூடுதலாக ஹெலிகாப்டர் இறங்குவதற்கு வசதியாக 2 தளங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் இந்த கோவிலின் சிறப்பு என்னவென்றால் இக்கோவில் மத நல்லிணக்கத்தின் ஒரு சின்னமாக உள்ளது. இக்கோவில் கட்டுவதற்காக 13.5 ஏக்கர் நிலத்தை ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான்என்று ‘ஒரு முஸ்லீம் மன்னர்’ பரிசாக அளித்துள்ளார்.
மேலும் இக்கோவிலின் முன்னணி கட்டிடக் கலைஞர் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவர், திட்ட மேலாளர் ஒரு சீக்கியர், அடித்தள வடிவமைப்பாளர் ஒரு புத்தர், கட்டுமான நிறுவனம் ஒரு பார்சி குழு, இயக்குனர் ஜெயின் பாரம்பரியத்தில் இருந்து வந்தவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.