நாட்டின் முதல் அவசர மருத்துவ ஹெலிகாப்டர் சேவை உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் தொடங்கப்படும் என்று மத்திய சிவில் விமான போக்குவரத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.
உத்தரகாண்ட் விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த விமான நிலைய கட்டடம் கட்டப்படும் என மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் தாமியிடம் உறுதியளித்தார்.
ரிஷிகேஷில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (AIIMS) முதல் அவசர மருத்துவ ஹெலிகாப்டர் சேவை (HEMS) தொடங்கப்படும் என்று மத்திய அமைச்சர் கூறினார். இந்த ஹெலிகாப்டர் சேவை சஞ்சீவனி திட்டத்தின் கீழ் செயல்படும்.
இந்த அவசர மருத்துவ ஹெலிகாப்டர் சேவை சுமார் 150 கிலோமீட்டர் சுற்று அளவிற்கு செயல்படும். இதன் மூலம் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மலைப்பகுதிகளில் இருந்து நோயாளிகள் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சரியான நேரத்தில் கொண்டு செல்லப்படுவதை உறுதி செய்யும்.
இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதும், உத்தரகாண்ட் மக்கள் பெரிதும் பயனடைவார்கள். அவசரக்கால ஹெலிகாப்டர் சேவைகள் நோயாளிகளைக் காப்பாற்றுவதற்கு இன்றியமையாததாக இருக்கும். மேலும், சுற்றுலா பயணிகள், யாத்ரீகர்கள் மற்றும் சாகச ஆர்வலர்களுக்கு இத்திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த திட்டம் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.