ஐக்கிய அமீரகத்தில் முதல் இந்து கோயில் திறக்கப்பட்டது, 140 கோடி இந்தியர்களின் இதயங்களை ஐக்கிய அரபு வென்றுள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்குப் பிரதமர் மோடி சென்றுள்ளார். இதற்காக டெல்லியில் இருந்து நேற்று சிறப்பு விமானம் மூலம் பிரதமர் மோடி அமீரகம் சென்றடைந்தார். அங்கே அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
அபுதாபியின் முதல் இந்து கோவிலைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார், இது மனிதக்குல பாரம்பரியத்தின் மிக முக்கிய சின்னமாக விளங்கும் என்றும் மனித வரலாற்றின் தங்கத்திலான புதிய அத்தியாயத்தை எழுதியதற்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
போச்சாசன்வாசி ஸ்ரீ அக்ஷர் புருஷோத்தம் ஸ்வாமி நாராயண் சன்ஸ்தா என்ற அமைப்பு கட்டிய கோவிலின் திறப்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி,
அபுதாபியில் பிரமாண்டமான கோவிலை நிஜமாக்கியதற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது சயீத் அல் நஹ்யானுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகத் தெரிவித்தார். மேலும், இது வளைகுடா நாட்டில் வாழும் இந்தியர்களின் இதயங்களையும், 140 கோடி இந்தியர்களின் இதயங்களையும் வென்று உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“இந்த பாப்ஸ் கோயில் உலகம் முழுவதும் மத நல்லிணக்கம் மற்றும் உலகளாவிய ஒற்றுமையின் அடையாளமாக மாறும் என்று நம்புகிறேன். இந்த பன்முகத்தன்மையில் வெறுப்பு நமது கண்களுக்குத் தெரிவதில்லை. பன்முகத்தன்மையை எங்கள் சிறப்பு என்று கருதுகிறோம்! இந்த கோவிலில், ஒவ்வொரு இடத்திலும் பலவிதமான நம்பிக்கையைப் பார்க்க முடிகிறது.
இதுவரை புர்ஜ் கலீஃபா, ஃபியூச்சர் மியூசியம், ஷேக் சயீத் மசூதி மற்றும் ஹைடெக் கட்டிடங்களுக்குப் பெயர் பெற்ற ஐக்கிய அரபு அமீரகம், அதில் இந்த கோயிலையும் மற்றொரு கலாச்சார அத்தியாயமாகச் சேர்த்துள்ளது.
வரும் காலங்களில் ஏராளமான பக்தர்கள் இங்கு வருவார்கள் என்று நான் நம்புகிறேன். இது ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு வருபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். இரு நாடுகளுக்கு இடையேயான மக்களிடையேயான தொடர்பை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
இந்த பிரமாண்ட கோவிலை நிஜமாக்குவதில் முக்கிய பங்கு வகித்தவர் என்றால் அது வேறு யாருமல்ல.. என் சகோதரன் ஐக்கிய அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் தான்.. கோடிக்கணக்கான இந்தியர்களின் ஆசையை நிறைவேற்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசை முழு மனதுடன் உழைத்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்கள் மட்டுமின்றி 140 கோடி இந்தியர்களின் இதயங்களையும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு வென்றுள்ளது.
இன்று அபுதாபியில் கிடைத்த மகிழ்ச்சி அலையால் அயோத்தியில் எங்கள் இன்பம் அதிகரித்து உள்ளது. முதலில் அயோத்தியில் உள்ள பிரம்மாண்டமான ஸ்ரீராமர் கோயிலுக்கும், பிறகு அபுதாபியில் உள்ள இந்தக் கோயிலுக்கும் நான் சாட்சியாக இருப்பது எனது அதிர்ஷ்டம்.
கடந்த மாதம் தான், அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற பலகால கனவு நிறைவேறியது. தொடர்ந்து இப்போது இங்கே அமீரகத்திலும் கோயில் திறக்கப்பட்டு இருக்கிறது” என்று தெரிவித்தார்.