கோவை, உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி காரில் சிலிண்டர் வெடித்தது. இதில், ஜமேஷா முபின்(28) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
தற்போது, இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில், தற்கொலைப் படை தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியது, வெடி பொருட்கள் தயாரிக்கத் தேவைப்படும் மூலப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், இந்த வழக்கு தொடர்பாகக் கோவையைச் சேர்ந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27), பெரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26), அப்சர்கான் (26) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில், கோவையைச் சேர்ந்த முகமது தவ்பிக் (25), நீலகிரி மாவட்டம், குன்னூரைச் சேர்ந்த உமர் பாரூக் (39), தெற்கு உக்கடத்தைச் சேர்ந்த பெரோஸ்கான் (28) ஆகிய மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கு, பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கோவை கார் வெடிப்பு தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள், ஆவணங்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.
அதில், 30 செல்போன்கள், 25-க்கும் மேற்பட்ட ஆவணங்கள், 6 ஹார்ட் டிஸ்க்குகள், 20-க்கும் மேற்பட்ட சிம் கார்டுகள் ஆகியவை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதனால், இந்த வழக்கு சூடு பிடித்துள்ளது.