அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராணுவத் தளபதி ஜெனரல் பாண்டே அந்நாட்டு ராணுவ தளபதியுடன் ஆலோசனை நடத்தினார்.
4 நாள் பயணமாக ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே அமெரிக்கா சென்றுள்ளார். ஃபோர்ட் மியர்ஸ் சென்ற அவருக்கு அமெரிக்க ராணுவம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். பின்னர் ஆர்லிங்டன் தேசிய கல்லறையில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இதனைத்தொடர்ந்து அமெரிக்க ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் ராண்டி ஜார்ஜை அவர் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்களை நோக்கமாகக் கொண்டது என்றும், உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான பரஸ்பர அர்ப்பணிப்பை மேலும் மேம்படுத்துகிறது என இந்திய ராணுவம் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் ஃபோர்ட் பெல்வோயரில் உள்ள இராணுவ புவிசார் மையத்திற்கு ஜெனரல் பாண்டே விஜயம் செய்தார். மேலும் ஃபோர்ட் மெக்நாயரில் உள்ள தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவருடன் அவர் கலந்துரையாடினார். வாஷிங்டன் டிசியில் உள்ள இந்திய தூதரகத்திற்குச் சென்ற அவர், ஸ்ரீப்ரியா ரங்கநாதனை சந்தித்து பேசினார்.