டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளதால் தற்போது இந்த போட்டி டை-யில் உள்ளது.
இதைத் தொடர்ந்து இன்று மூன்றாவது போட்டி சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.
இந்தப் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
இதில் ரோகித் சர்மா 14 பௌண்டரீஸ் மற்றும் 3 சிக்சர்கள் என மொத்தமாக 131 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்த சிக்சர்கள் மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இந்த பட்டியலில் வீரேந்திர சேவாக் 91 சிக்சர்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார். ரோகித் சர்மா 80 சிக்சர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
மகேந்திர சிங் தோனி 78 சிக்சர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். இதில் சச்சின் டெண்டுல்கர் 69 சிக்சர்களுடன் நான்காவது இடத்திலும், ஜடேஜா 62 சிக்சர்களுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளார்.